அமெரிக்காவிற்காக ஈரானில் உளவுபார்த்த மூன்று பேரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையால் நடத்தப்படுவதாகக் கூறப்படும் ஒரு பெரிய சைபர்-உளவு வளையத்தின் விவரங்களை கடந்த 2019 கோடையில் ஈரானிய செய்தி ஊடகங்கள் வெளியிட்டன.
மொத்தம் 17 மத்திய புலனாய்வு முகமை பயிற்சி பெற்ற உளவாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும், ஈரானியர்கள் தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட, அமெரிக்கா ஆட்சேர்ப்பு செய்ய முயன்றதாகக் கூறப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டன.
மற்ற நாடுகளின் உளவுத்துறையின் உதவியுடனே ஒரு பெரிய உளவு அமைப்பை உடைத்ததாக ஜூன் மாதம் ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், ஈரானில் சிஐஏவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ஈரானின் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசின் இஸ்மாயிலி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
"சிஐஏ உளவாளியாக இருந்த அமீர் ரஹிம்பூர், ஈரானின் அணுசக்தி தகவல்களின் ஒரு பகுதியை அமெரிக்க சேவைக்கு வழங்க முயன்றதால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்தது. அது விரைவில் நிறைவேற்றப்படுவதை நீங்கள் காண்பீர்கள்" என கூறினார்.
மேலும், சிஐஏவுக்காக உளவு பார்த்ததற்காக ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தேசிய பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதற்காக மற்றொருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.