MH370 விமானி வேண்டுமென்றே 239 பயணிகளை கொன்றிருக்கலாம்: சர்ச்சையை கிளப்பிய டோனி அபோட்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 239 பயணிகளுடன் மாயமான MH370 விமானம் வேண்டுமென்றே விமானியால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

மார்ச் 8, 2014 அன்று மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட போயிங் 777 ரக மலேசியா ஏர்லைன்ஸ் விமானமானது நடுவானில் பறந்துகொண்டிருந்த போது 239 நபர்களுடன் திடீரென மாயமானது.

இந்தியப் பெருங்கடலில் 12,000 சதுர கி.மீ பரப்பளவில், பல மாதங்களாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு யுகங்கள் வந்த வண்ணம் இருந்தன. விமான வரலாற்றில் மிகப்பெரிய சம்பவமாக கருதப்படும், MH370 தொடர்பான எந்த அடையாளங்களும் இறுதிவரை கிடைக்கவில்லை.

இந்தியப் பெருங்கடலில் காணாமல் போன விமானத்தை நீருக்கடியில் தேடும் மலேசியா, சீனா மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளின் தலைமையிலான இரண்டு ஆண்டு சர்வதேச முயற்சி 2017 ஜனவரியில் முடிவடைந்தது.

MH370 காணாமல் போனதற்கான உண்மையான காரணத்தை புலனாய்வாளர்களால் தீர்மானிக்க முடியவில்லை என்று மலேசிய அதிகாரிகளின் 2018 அறிக்கை முடிவு செய்திருந்தது.

இந்த சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது "எம்.எச்.370: தி அன்டோல்ட் ஸ்டோரி" (MH370: The Untold Story) என்ற ஆவணப்படத்திற்காக, அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் பேசியுள்ளவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அந்த நிகழ்ச்சியில், மலேசிய அரசாங்கத்தின் மிக அதிகாரிகளிடம் இருந்து தனக்கு கிடைத்த தகவல்படி, விமானம் ஒரு தற்கொலை எண்ணம் கொண்டிருந்ததாகவும், அவர் வேண்டுமென்றே பயணிகளுடன் கடலில் விமானத்தை வீழ்த்தியிருக்கலாம் என பேசியுள்ளார்.

மேலும், " இந்த தகவலை யார் யாரிடம் சொன்னார்கள் என்று நான் சொல்லப்போவதில்லை" எனவும் கூறியுள்ளார்.

இந்த கருத்தானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மலேசிய விமானம் மாயமானதற்கு அதன் விமானிதான் காரணம் என்று உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் கூறுவதை ஏற்க இயலாது என மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...