கொரோனாவால் மருத்துவர் பாதிப்பு: பிரித்தானியர்கள் உள்ளிட்ட 1,000 பேர் வெளிநாட்டில் சிறைவைப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டின் டெனெர்ஃப் தீவில் இத்தாலிய மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில், அவர் தங்கியிருந்த ஹொட்டலை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

டெனெர்ஃப் தீவில் அமைந்துள்ள Costa Adeje Palace ஹொட்டலில் பிரித்தானியர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த ஹொட்டலில் தங்கியிருந்த இத்தாலிய மருத்துவர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து Costa Adeje Palace ஹொட்டலை அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், யாரும் உள்ளே நுழைவதில்லை அல்லது வெளியேறவில்லை என்பதை உறுதிசெய்யும் பொருட்டு காவல்துறையினர் ஹொட்டலுக்கு வெளியே குவிக்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி, ஹொட்டலுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எதுவும் பதிலளிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நோயாளி தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது சோதனை முடிவுகள் இரண்டாவது பகுப்பாய்விற்கு மாட்ரிட் நகர மருத்துவமனைக்கு அனுப்பப்படும் என அங்குள்ள அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் பலர் மரணமடைந்த இத்தாலியின் லோம்பார்டி பகுதியைச் சேர்ந்தவர் இந்த மருத்துவர் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆறு நாட்களாக தனது மனைவியுடன் Costa Adeje Palace ஹொட்டலில் தங்கியிருப்பதாக கருதப்படுகிறது.

குறித்த மருத்துவர் பல நாட்களாக தமக்கு காய்ச்சல் இருப்பதாக உணர்ந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு நாடியுள்ளார்.

இந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்