சீனாவில் மாமிச உணவு வாங்க 8-வது மாடியில் இருந்து பெண் குதித்தாரா? வெளியான உண்மைத் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனா வுஹான் நகரில் கொரோனா பாதிப்பால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் பெண்மணி ஒருவர் 8-வது மாடியில் இருந்து சாகசமாக வெளியேறிய சம்பவத்தின் உண்மை நிலை வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரம் கடந்த பல வாரங்களாக கொரோனா வியாதி பரவுவது காரணமாக மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மக்கள் ஒவ்வொருவரும் தீவிர கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் வுஹான் நகரில் இருந்து பரவியதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே சீன நிர்வாகம் வுஹான் நகரை மொத்தமாக முடக்கியது.

இந்த நிலையில் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 62 வயது பெண்மணி ஒருவர், சொந்த மகனால் பாதுகாப்பு கருதி அவர்களது குடியிருப்பின் ஒரு அறையில் பூட்டப்பட்டிருந்தார்.

ஆனால், குறித்த பெண்மணி, நூடுல்ஸ் உணவுடன் அந்த 8-வது மாடியில் இருந்து தன்னந்தனியாக கீழிறங்கிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

வுஹான் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் அந்த பெண்மணிக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, வுஹான் நகரம் மொத்தமாக முடக்கப்பட்ட நிலையில், மாமிச உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், குறித்த பெண்மணி ரகசியமாக மாமிசம் வாங்க குடியிருப்பில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட தகவலை பொலிசார் மறுத்துள்ளனர்.

மேலும் அவருக்கு மனச்சிதைவு நோய் இருப்பதாகவும், அவரது நோய்க்கு சிகிச்சை எடுக்க மறுத்துவிட்டதாகவும் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மட்டுமின்றி பிப்ரவரி 16 ஆம் திகதி இதேப்போன்று அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி பதுங்கியதாகவும், எட்டு நாட்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்