பிரேசிலில் வழக்கமான வாகன சோதனையின்போது பொலிசார் ஒரு ட்ராக்டரை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
அப்போது அந்த ட்ராக்டரின் சாரதி நடுக்கத்துடனும் படபடப்பாகவும் காணப்பட்டுள்ளார்.
ஆனால், ட்ராக்டரின் பின்னால் உள்ள ட்ரெய்லரை சோதனையிட்டபோது அதில் சந்தேகத்துக்கிடமான வகையில் எதுவும் இல்லை. எனவே, பொலிசார் மோப்ப நாயை வரவழைத்துள்ளனர்.
மோப்பநாய் வாகனத்தில் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. பின்னர் அந்த ட்ரெய்லரை ஆராய்ந்ததில், அதில் போலியான உட்புறச் சுவர் இருப்பது தெரியவந்துள்ளது.
ட்ரெய்லரின் உட்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த தகர தகட்டை அகற்ற, அதன் பின்னால் 1,202 பொட்டலங்களில் கஞ்சா மறைத்துவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அந்த வாகனத்தில் இருந்த 906 கிலோ போதைப்பொருளின் மதிப்பு 1.6 மில்லியன் டொலர்களாகும்.
அந்த ட்ராக்டரின் சாரதி, அந்த போதைப்பொருள் அடங்கிய ட்ரெய்லரை இயக்குவதற்காக 6,800 டொலர்களும், அந்த ட்ரெய்லரை தாங்கள் சொல்லும் இடத்தில் விட்டு வருவதற்கு 500 டொலர்களும் தருவதாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
அந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த போதைப்பொருளையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.