ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற உதவியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவை அடுத்து ஐரோப்பிய நாடுகளை கொரோனா அச்சுறுத்தல் கடுமையாக தாக்கி வருகிறது. இத்தாலி, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 6,391 பேர் இலக்காகியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 196 என அதிகரித்துள்ளது.
கொரோனா பரவுதலை தடுக்கும் நோக்கில் இங்குள்ள மருத்துவர்கள், நர்சுகள், துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என அனைவரும் கடுமையாக போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு நன்றி கூறும் வகையில், அவர்களின் தொண்டை ஆதரிக்கும் பொருட்டு, ஸ்பெயின் மக்கள் ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை மாலை ஜன்னல்கள் அல்லது பால்கனிகளில் நின்று,இந்த இக்கட்டான சூழலில் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களின் நலனுக்காக போராடும் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற உதவியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


மாட்ரிட் நகரில் இரவு 10 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், பல ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வை பல தன்னார்வலர்கள் முன் நின்று ஒருங்கிணைத்துள்ளனர். இது நாடு முழுவதும் தெரிவிக்கப்பட்டு, ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த ஸ்பெயின் மக்களும் மருத்துவர்களை ஆதரிக்கும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில், இத்தாலிக்கு அடுத்து கொரோனா பாதிப்புக்கு அதிகம் இலக்கான நாடு ஸ்பெயின்.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது சில நாட்களில் பல ஆயிரங்களை தொட்ட நிலையில், அதி தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
