ஜப்பானில் கடந்த 2016ம் ஆண்டு 19 ஊனமுற்றவர்களை கத்தியால் குத்தி கொன்ற நபருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு டோக்கியோவுக்கு அருகில் அமைந்துள்ள பராமரிப்பு மையத்திற்குள் அதிரடியாக நுழைந்த 30 வயதான சடோஷி உமாட்சு தூங்கிக்கொண்டிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு பின் தானாகவே அருகில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உமாட்சு நடத்திய தாக்குதலில் 19 ஊனமுற்றவர்கள் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர். சடோஷி உமாட்சு குறித்த பராமரிப்பு மையத்தின் முன்னாள் ஊழியர் என விசாரணையில் தெரியவந்தது.
தாக்குதலின் போது அவர் கஞ்சா போதையில் இருந்ததாகவும், அவர் சுயநினைவில் இத்தாக்குதலில் ஈடுபடவில்லை என உமாட்சு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
விசாரணையின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு மனித உரிமைகள் இல்லை என்று சடோஷி உமாட்சு கூறியதாக உள்ளுர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கை விசாரித்து வந்த யோகோகாமா மாவட்ட நீதிமன்றம், சடோஷி உமாட்சுவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தனக்கு எந்த திட்டமும் இல்லை என சடோஷி உமாட்சு தெரிவித்துள்ளார்.