கொரோனா தாக்கிய முதல் நாய் உயிரிழப்பு: கொரோனாவிலிருந்து தப்பியும் மரணத்துக்கு தப்பாத பரிதாபம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

உலகின் கொரோனா தாக்கிய முதல் நாய், தொற்றிலிருந்து விடுபட்ட நிலையிலும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்ஹொங்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான நாய் ஒன்றிற்கு உலகிலேயே முதல் முறையாக கொரோனா தொற்றிய நிலையில், அது கொரோனாவிலிருந்து விடுபட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

17 வயதான அந்த பொமரேனியன் வகை நாய்க்குட்டி சென்ற மாதம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானது.

அதன் உரிமையாளருக்கு ஏற்கனவே கொரோனா தொற்றியிருந்த நிலையில், அவரிடமிருந்து அந்த நாய்க்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்று கருதப்பட்டது.

அந்த நாயின் உடலிலிருந்த கொரோனா வைரஸும் அதன் உரிமையாளர் உடலிலிருந்த கொரோனா வைரஸும் கிட்டத்தட்ட ஒரே ஜீன் அமைப்பைக் கொண்டிருந்தன.

அதன் உரிமையாளரான Yvonne Chow Hau Yee (60) என்ற பெண், அரசு காப்பகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். சென்ற வார இறுதியில்தான் அவர் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து விடுபட்ட அந்த நாய் இம்மாதம் 16ஆம் திகதி (நேற்று முன்தினம்) உயிரிழந்துவிட்டதாக அதன் உரிமையாளர் தெரிவித்ததாக ஹொங்ஹொங் விவசாயம் மற்றும் மீன் வளத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நாயின் உரிமையாளர் அதற்கு பிரேத பரிசோதனை செய்ய விரும்பாததால், அது எதனால் உயிரிழந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமலே போய்விட்டது. உலகிலேயே கொரோனா தொற்றிய ஒரே நாய் இந்த நாய்தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

அத்துடன், நாய் பூனை முதலான எந்த பிராணியும் இதுவரை கொரோனாவை பரப்பியதாக ஆதாரம் எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்