கொரோனா பாதிப்புக்கான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? ஐ.நா சிறப்பு அதிகாரி தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலக நாடுகளை மொத்தமாக முடக்கி வரும் கொரோனா பாதிப்புக்கான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி பதிலளித்துள்ளார்.

கொரோனா பாதிப்புக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இதில் பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டாக்டர் டேவிட் நபரோ தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸின் மரபணுத் தொகுதி வரிசையை பயன்படுத்தி, வைரஸ்களை வளர்த்தெடுத்து அதன் இயக்கம், மனித செல்களில் எப்படி நுழைகிறது, நோயை எப்படி உருவாக்குகிறது என்பது உள்ளிட்ட விவரங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.

தடுப்பு மற்றும் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்க இந்த விவரங்களே முக்கியமானவை. முதன் முதலில் மரபணுத் தொகுதி வரிசைப்படுத்தப்பட்ட உடனேயே அமெரிக்காவில் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனை மார்ச் 16 ஆம் திகதி தொடங்கியது. இதேபோல சீனாவிலும் முதல் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது.

முதல் கட்டத்தில் விலங்குகள் மீதும் மனிதர்கள் மீதும் சோதித்து பார்க்க வேண்டும், இரண்டாம் கட்டத்தில் தடுப்பு மருந்தின் திறன், பக்க விளைவுகள் குறித்து ஆராயப்பட வேண்டும்.

மருந்து வெற்றி எனில், அந்த தடுப்பூசியானது நோயை தடுக்கக் கூடியது என்பதோடு பாதுகாப்பானது என உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

அதன் பிறகு உலக நாடுகள் உரிய விதிமுறைகளின் அடிப்படையில் தடுப்பு மருந்துக்கு உரிமம் வழங்க வேண்டும்.

எனவே, ஆய்வுக்கான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் ஒன்றிரண்டு மாதங்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என கருதக் கூடாது என்றும், குறைந்தது 18 மாதங்களாவது ஆகும் என்றும் டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்