8 நாட்களில் 5 லட்சம்.... உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 10 லட்சம் மக்கள் பாதிப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகம் முழுவதும் 1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தனியார் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹோப்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதி வேகமாக பரவி வரும் நிலையில், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் கொரோனாவால் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒட்டு மொத்தமாக இதுவரை 52,000 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். அதிக உயிரிழப்புகளை இத்தாலி எதிர்கொண்டுள்ள நிலையில், இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் தொடர்ந்து அமெரிக்காவும் உள்ளது.

முதல் ஒரு லட்சம் பாதிப்புகளை பதிவு செய்ய 55 நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில், கடந்த 8 நாட்களில் கொரோனா தொற்றால் இலக்கானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக அதிகரித்துள்ளது.

117 நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் புதிதாக கொரோனாவுக்கு இலக்கானதாக பதிவாகியுள்ள நிலையில், 50 நாடுகளில் இந்த எண்ணிக்கை 1,000 என பதிவாகியுள்ளது.

ஆனால் 7 நாடுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 50,000-கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 22 சதவீதம் அமெரிக்காவிலும், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இந்த எண்ணிக்கை 11 சதவீதம் எனவும் தெரியவந்துள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று உருவானதாக கருதப்படும் சீனாவில் இந்த எண்ணிக்கை வெறும் 8 சதவீதம் என பதிவாகியுள்ளது.

இதுவரை கொரோனாவுக்கு மரணமடைந்தவர்களில் 70 சதவீதத்தினர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

உலகின் 90 நாடுகளில் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கை அமுலில் இருக்கும் நிலையில், சுமார் 3.9 பில்லியன் மக்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் குடியிருப்புக்குள் முடங்கியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்