கொரோனா பீதி... கொத்தாக பட்டினிச்சாவுக்கு இலக்கான முதியோர் காப்பகம்: கைவிடப்பட்ட 87 முதியவர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியில் கொரோனா பீதியில் கைவிடப்பட்ட முதியோர் காப்பகம் ஒன்று பட்டினிச்சாவுக்கு இலக்கான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெற்கு இத்தாலியில் உள்ள Soleto பகுதியில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றே கடந்த சில தினங்களாக மரண போராட்டத்தில் தத்தளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில், அந்த காப்பகத்தின் நிர்வாகிகள், இல்லத்தை மூடிவிட்டு மாயமாகியுள்ளனர்.

இதனால் அங்குள்ள 87 முதியவர்கள் உணவு, மருந்து, பராமரிப்பின்றி கடந்த சில நாட்களாக மரணத்தை எதிர்கொண்டு வாழ்ந்துள்ளனர்.

இதில் 70 முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பின்னர் மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

நிர்வாகிகள் மாயமான பின்னர், முதியவர்கள் பட்டினியால் வாடியுள்ளனர். சுத்தப்படுத்தவும், உடை மாற்றவும் வாய்ப்பில்லாமல் அவஸ்தைக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், இந்த நரக அவஸ்தையில் இருந்து விடுபட, அந்த காப்பகத்தில் தங்கியிருந்த ஒரு மூதாட்டி தமது பேத்திக்கு வீடியோ அழைப்பில் நடந்தவற்றை விளக்கியுள்ளார்.

அந்த பேத்தி உடனடியாக Soleto நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, காப்பகத்தின் நிலையை விளக்கியுள்ளார்.

இதனையடுத்தே நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுக்கள் அந்த காப்பகத்தை மீட்டுள்ளனர். இதில் பேத்திக்கு வீடியோ அழைப்பில் தகவல் அளித்த மூதாட்டி உட்பட 8 பேர் பட்டினியால் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் வைத்து இறந்துள்ளனர்.

எஞ்சியவர்கள் கொரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை அந்த காப்பக நிர்வாகம் பதில் ஏதும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, 87 முதியவர்களை இரக்கமின்றி பட்டினிச்சாவுக்கு தள்ளிய நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நகர நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்