கொரோனா விவகாரம்... முதல் முறையாக ஒப்புக் கொண்ட சீனா! 120-க்கும் மேலான நாடுகள் ஆதரவு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலக நாடுகளின் தொடர் அழுத்தம் காரணமாக, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அது விலங்குகளிடமிருந்து, மனிதர்களுக்கு பரவியது தொடர்பான விசாரணைக்கு சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், தற்போது வரை உலகம் முழுவதிலும், 4,848,238-பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 317,795 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸின் தோற்றம் அது மனிதர்களுக்கு எப்படிப் பரவியது என்பது குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீனாவின் அலட்சியத்தாலேயே இந்த நோய் உலக அளவில் பரவியதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், வுஹானில் உள்ள ஆய்வகம் ஒன்றில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியிருக்கலாம் என்றும் அமெரிக்கா கூறிவந்தது. இதற்கு அவுஸ்திரேலியாவும் ஆதரவு தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்துவந்ததுடன், இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல, இயற்கையாக உருவானது என்றும் விளக்கம் கொடுத்து வந்தது.

இதையடுத்து இன்று உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டம் துவங்கியது.

இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்தும் அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எப்படிப் பரவியது என்பது குறித்தும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்டவை இணைந்து தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தன.

194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள உலக சுகாதார அமைப்பில், இந்தத் தீர்மானத்துக்கு 120-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், முதல்முறையாகக் கொரோனா விவகாரத்தில் விசாரணை நடத்துவது குறித்து சீனா இறங்கிவந்துள்ளது.

இரண்டு நாட்கள் (மே 18 மற்றும் 19) நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பன்ரஸ் மூலம் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடந்துகொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய ஒருமித்த விசாரணைக்கு சீனா ஆதரவு தெரிவிக்கிறது.

இந்த கடினமான சூழலில் உலக அளவில் மக்கள் உயிர்காக்கும் இந்தப் போரில் உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது கடமை.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்தால் அது உலகின் நன்மைக்காகப் பொதுச் சொத்தாக அறிவிக்கப்படும். வளரும் நாடுகளுக்கும் அது உடனடியாகக் கிடைப்பதை சீனா உறுதிசெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து விசாரணை வேண்டும் என உலக நாடுகள் தொடர் அழுத்தம் கொடுத்து வந்தநிலையில், முதல்முறையாக சீனா இந்த விவகாரத்தில் இறங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்