வெளிநாட்டில் தொழில் செய்யும் கேரளாவை சேர்ந்த நபருக்கு லொட்டரியில் கோடிக்கணக்கிலான பரிசு விழுந்துள்ளது.
கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்தவர் ராஜன் குரியன் (43). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ராஜன் துபாயில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கொரோனா காரணமாக ராஜனின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு முடங்கியதால் அவர் கவலையில் ஆழ்ந்தார்.
இந்த சூழலில் தான் அவருக்கு Dubai duty-free லொட்டரியில் ரூ 7.5 கோடி அளவிலான பரிசு விழுந்துள்ளது.
இது குறித்து ராஜன் கூறுகையில், இந்த கடினமான காலங்களில் லொட்டரியில் பெரிய பரிசை வென்றது மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகிறது.
இருப்பினும் இந்த சமயத்தில் துன்பப்படுபவர்களை நினைவில் வைத்துக் கொள்ள நான் தவற மாட்டேன், பரிசு பணத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுத்து உதவுவேன் என கூறியுள்ளார்.
மேலும் தனது இரு பிள்ளைகளான பிரயன் மற்றும் பெல்லா அன் ஆகியோரின் கல்வி செலவுக்கு பரிசு பணத்தை பயன்படுத்துவதோடு, தொழிலை மேம்படுத்தவும் செலவிடுவேன் என கூறியுள்ளார்.