பிரேசிலில் இளைஞர்களை அதிகம் தாக்கும் கொரோனா: வெளியான முக்கிய காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலக நாடுகள் பெரும்பாலானவை உருக்குலைந்து போயுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் சில மாதங்களாகத் தொடரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடலியல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில்,

பிரேசிலில் இளம் வயதினர் அதிகம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் இதுவரை 3,10,921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

20,082 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 13.6% பேர் மட்டுமே 60 வயதுக்கு மேற்பட்டோர்.

இது ஸ்பெயினில் 25% மற்றும் இத்தாலியில் 28% ஆகவும் உள்ளது. இந்நிலையில், பிரேசிலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 69% பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.

அதேநேரத்தில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் பாதிக்கப்பட்டோரில் 60 வயதுக்கு மேற்பட்டோர் விகிதம் 95% ஆக உள்ளது.

அதேபோன்று பிரேசிலில் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தவர்களின் விகிதம் (60 வயதுக்குக் கீழ் உள்ளோர்) 19% ஆக இருந்த நிலையில் தற்போது 31% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 20 முதல் 29 மற்றும் 30 முதல் 39 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டோரின் விகிதத்தை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்று ஒரு வல்லுநர்கள் குழு மதிப்பிட்டுள்ளது.

காரணம் பிரேசில் உழைக்கும் இளம் வயதினர் அதிகம். மற்ற நாடுகளை விட பிரேசிலில் அதிகமான இளைஞர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் கொரோனா பாதிப்புக்கு ஆளாவதாக பிரேசிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மவுரோ சான்செஸ் கூறுகிறார்.

சில வல்லுநர்கள் அந்நாட்டு அரசு கொரோனாவுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்கிறார்கள். ஊரடங்கு விதிமுறைகள் அந்தந்த மாநில அளவில் அல்லது உள்ளூர் மட்டத்தில் தீர்மானிக்கப்படுவதும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.

மேலும், அரசு கூறும் பாதிப்பு நிலவரத்தை விட நாட்டில் உண்மையாக பாதிப்பு நிலவரம் அதிகமாக இருக்கும் என்றும் அதன்படி, நாட்டில் 3.6 மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாகும். தேசிய பொது சுகாதார மையத்தின் நுரையீரல் நிபுணர் பாட்ரிசியா கான்டோ என்பவர் கூறுகையில்,

இளைஞர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பை பலர் பெரிதாக கண்டுகொள்ளாததே நாட்டில் அதிக பாதிப்பு ஏற்படக் காரணம் என்கிறார்.

இளம் மக்கள்தொகை மட்டுமின்றி, சில உயிரிழப்புகளுக்கு வறுமையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பெரும்பாலும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரிய ஆபத்து காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,

தற்போது வேலை இல்லாததால் வறுமை காரணமாக பலருக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை என்றும் இதனால் அன்றாடத் தொழிலாளர்கள் வரும் காலங்களிலும் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் தொற்று நோய் நிபுணர் ஜூலியோ க்ரோடா தெரிவித்தார்.

மேலும், அரசு சில சலுகைகள் மற்றும் நிவாரணங்களை அறிவித்திருந்தாலும் அன்றாடத் தொழிலாளர்கள் அதைப் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்