நடுவானில் பயணிக்கு கொரோனா கண்டுபிடிப்பு: மொத்த விமானமும் தனிமைப்படுத்தப்பட்டது

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் விமானம் ஒன்று நடுவானில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அதில் பயணித்துக்கொண்டிருந்த பயணி ஒருவரின் கொரோனா பரிசோதனையின் முடிவு வந்துள்ளது.

மாட்ரிடிலிருந்து அந்த விமானம் 140 பேருடன் Lanzaroteக்கு சென்றுகொண்டிருந்திருக்கிறது.

விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானம் ஏறுவதற்கு முன்புதான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

அவருடன் நெருக்கமான ஒருவர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து, அவர் தானும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

பலியான நபர், அந்த பயணியின் தாயார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், சோதனையின் முடிவுகள் வரும் முன்னரே அவர் விமானம் ஏறிவிட்டார். விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருக்கும்போதுதான் அவரது சோதனை முடிவுகள் வந்துள்ளன.

சோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் தெரியவந்ததும், விமான அதிகாரிகள் Lanzaroteஇலுள்ள சுகாதாரத்துறைக்கு தகவலளித்து அவர்களை தயாராக இருக்க பணித்துள்ளார்கள்.

விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த பயணியும், அவருடன் விமானத்தில் பயணித்த 140 பயணிகளும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

அந்த நபர் மீது, தன்னைத் தனிமைப்படுத்தத் தவறியதாகவும், பொது சுகாதாரத்துக்கு ஊறு விளைவுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை ஸ்பெயினில், 255,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 27,119 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்