பொலிஸ் காவலில் இளைஞர் அடித்துக் கொலை: பட்டப்பகலில் காவலரை உயிருடன் கொளுத்திய கும்பல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மெக்சிகோ நாட்டில் பொலிஸ் காவலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பொலிசார் ஒருவரை உயிருடன் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் Guadalajara பகுதியில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் முகக்கவசம் அணியாததன் பேரில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் அந்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், கொல்லப்பட்ட இளைஞருக்கு நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆர்ப்பாட்டத்தின் போது தனியாக சிக்கிய ஒரு பொலிஸ் அதிகாரி மீது ஒருவர் எரியக்கூடிய திராவகத்தை ஊற்றியுள்ளார்.

பின்னர் அவர் மீது நெருப்பு வைத்துள்ளார். குறித்த சம்பவத்தை ஊடகவியலாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருந்தார்.

திடீரென்று பொலிசார் மீது திராவகத்தை ஊற்றி நெருப்பு வைத்த நிலையில், அந்த காவலர் உடனடியாக தரையில் விழுந்து தற்காத்துக்கொள்ள முயன்றுள்ளார்.

அந்த பொலிசாரை குறிவைத்து நெருங்கிய கும்பலை எஞ்சிய பொலிசார் இடைமறித்து துரத்தியுள்ளனர்.

மட்டுமின்றி, அந்த காவலரை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாகாண ஆளுநர் இந்த விவகாரத்தை உறுதி செய்துள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் மேலும் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த கலவரம் தொடர்பில் பொதுமக்களில் 26 பேர் கைது செய்துள்ளதாக கூறிய ஆளுநர், மூன்று ரோந்து வாகனங்கள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கட்டிடத்தொழிலாளியை அடித்தேக்கொன்ற மாகாண நிர்வாகம் அதற்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்ற முழக்கம் பொதுமக்கள் முன்வைத்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்