கொத்துக் கொத்தாக யானைகள் மரணமடைந்த சம்பவம்... மனிதர்களுக்கும் ஆபத்து: நிபுணர்கள் அச்சம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
420Shares

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் மர்மமான முறையில் யானைகள் கொத்துக் கொத்தாக மரணமடைந்த விவகாரத்தில், அந்த விசித்திர தொற்றால் மனிதர்களுக்கு ஆபத்து உண்டா என நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ பகுதியில் 280 க்கும் மேற்பட்ட யானைகள் தொற்றுநோயால் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

இருப்பினும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 400 க்கு அருகில் இருக்கக்கூடும் என்று பாதுகாப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

குறித்த மர்ம நோய் தொற்றால் யானைகள் குழப்பமாக இருந்ததையும், வட்டமாக அலைந்து திரிந்ததையும், இறப்பதற்கு முன் அதன் முகம் வாடிப்போனதையும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா போன்ற ஒரு பெருந்தொற்றாக இருக்க வாய்ப்புள்ளதாக வனவிலங்கு ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

வேட்டையாடுதல் மற்றும் ஆந்த்ராக்ஸ் ஆகியவை சாத்தியமான காரணங்களாக கண்டறியப்பட்டாலும், யானைகள் மொத்தமாக மரணமடையும் அளவுக்கு அப்பகுதியானது வறட்சி மிகுந்தும் காணப்படவில்லை என்கின்றனர்.

சுமார் 18,000 யானைகள் வசிக்கும் போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ டெல்டாவில் 3,000 சதுர மைல்களுக்கு மேல் பகுதியில் இந்த இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

மிக மோசமான நிலை என்னவென்றால், இது இன்னொரு பெருந்தொற்றாக மாறும். இது மக்களுக்கு பரவலாம் என்ற வாய்ப்பை நிராகரிப்பது கடினம் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த யானைகளின் மர்மமான இறப்பு என்பது ஒரு பொது சுகாதார நெருக்கடியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது என கூறும் நிபுணர்கள்,

முழு சூழலையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் - தாவரங்கள், நீர் மற்றும் மண். சடலத்தின் அனைத்து திசுக்களும், தசை, இரத்தம், மூளை, மண்ணீரல் என அனைத்தும் முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

யானை சடலங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் இறப்புக்கான காரணத்தை தீர்மானிக்க ஜிம்பாப்வேக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கண்டுபிடிப்புகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து கூடுதல் முடிவுகளுக்காக நிபுணர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்