உலகின் பல்வேறு நாடுகளில் டெங்கு பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பருவ காலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் நோய் டெங்கு, இவரையிலும் அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்தக் காய்ச்சலால் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லையென்றாலும் கூட, அந்த நோய் ஏற்பட்டவா்கள் மிகுந்த வலியை ஏற்படுத்தும் மோசமான அறிகுறிகளால் அவதியுறுவாா்கள்.
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் மூழ்கியிருப்பதால் டெங்கு பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே தென் கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளான கியூபா, சிலி, கோஸ்டரிகா போன்ற நாடுகளிலும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்கு ஆசிய நாடுகளிலும் பருவமழை தொடங்கியிருப்பதால், அந்தப் பகுதிகளில் டெங்கு பரவல் தீவிரமடையும் அபாயம் நிலவி வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியிருப்பதும் டெங்கு பரவலுக்கு சாதகமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஆனால், ஏற்கெனவே கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும்போது உயிரிழப்பு விகிதமும் அதிகரிக்கக் கூடும்.