வடகொரியாவில் அவசர ஊரடங்கு பிறப்பிப்பு! நாட்டுக்குள் நுழைந்த கொரோனா? வெளிவந்த முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
388Shares

வடகொரியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபருக்கு கொரோனா இருப்பதாக சந்தேககிக்கப்படும் நிலையில் அவசர கூட்டத்தை அதிபர் கிம் ஜாங் கூட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதுவரை உலகளவில் 1.59 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6.42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தனை மாதங்களாக உலகையே பாடுபடுத்தி வரும் கொரோனா வைரஸ் வட கொரியாவில் மட்டும் நுழையவில்லை என அந்நாடு கூறி வந்தது.

கொரோனாவை நுழைய விடாமல் தடுப்பதற்காக வட கொரியா தனது எல்லையை முழுமையாக முடக்கி வைத்திருந்தது.

சில வாரங்களுக்கு முன்பு வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் பொலிட்பியூரோ கூட்டத்தில் பேசுகையில், கொரோனா வட கொரியாவில் நுழைந்தால் நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், தென் கொரியாவில் இருந்து ஒருவர் சட்ட விரோதமாக எல்லை வழியாக வட கொரியாவுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிபர் கிம் ஜாங் அன் அவசரமாக பொலிட்பியூரோ கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டால் வடகொரியாவுக்குள் முதல் கோவிட்-19 தொற்று பரவல் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வடகொரிய-தென்கொரிய எல்லையில் இருக்கும் கேசோங் நகரில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மூன்று ஆண்டுகளுக்கு முன் வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்கு தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.

அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களை வடகொரியாவுக்கு ரஷ்யா வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்