கொலைகாரர்களே.. இதுவரை எங்கிருந்தீர்கள்: பிரான்ஸ் ஜனாதிபதியிடம் கொந்தளித்த பெய்ரூட் மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
534Shares

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை மொத்தமாக சிதைத்த வெடிவிபத்துக்கு பின்னர் மக்களின் கோபம் அரசியல் தலைவர்கள் மீது திரும்பியுள்ளது.

பேரழிவை ஏற்படுத்திய வெடிவிபத்துக்கு பின்னரும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மிகவும் ஆபத்தான பகுதியாகவே நீடிக்கிறது.

மக்களிடம் விரக்தியும் கோபமும் முந்தைய நாட்களை விட பலமடங்கு தற்போது அதிகரித்துள்ளது.

வெடிவிபத்துக்கு முன்பே பலர் பொருளாதார சூழ்நிலையால் அவதிப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது துறைமுகத்தில் ஏற்பட்ட இந்த கோர விபத்து எஞ்சியிருந்த எந்தவொரு வாழ்வாதாரத்தையும் மக்களிடம் இருந்து பறித்துள்ளது.

இந்த நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோனிடம் பெய்ரூட் மக்கள் தங்கள் கோபத்தையும் ஆதங்கத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

விபத்து நடந்த பகுதிகளை வியாழக்கிழமை மேக்ரோன் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது, வெடிவிபத்தால் முற்றாக சேதமடைந்த ஒரு குடியிருப்பின் மாடியில் நின்றுகொண்டு பெண் ஒருவர்,

நீங்கள் எல்லாரும் கொலைகாரர்கள் தானே, கடந்த நாட்களில் எல்லாம் எங்கே இருந்தீர்கள் என கோபத்தில் கத்தியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி மீது மட்டுமின்றி, லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் மீதும் கூடியிருந்த மக்கள் தங்கள் கோபத்தை காட்டியுள்ளார்.

அவுன், உண்மையான தீவிரவாதி நீங்கள் தான் என கூட்டம் பலத்த குரலில் கத்தியுள்ளது.

ஊழல் மற்றும் முறைகேடுகளால் சீரழிந்துள்ள லெபனான் அரசியல் அமைப்பை அகற்ற வேண்டும் என்ற இலக்குடன் கடந்த அக்டோபரில் வெகுஜன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தற்போதைய சூழலில் சர்வதேச உதவி ஏதுமின்றி சீரமைக்க முடியாத நிலைக்கு லெபனான் தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அளவுக்கு பொருளாதார உதவி செய்யும் நிலையில் சர்வதேச சமூகம் இல்லை என்பதே கசப்பான உண்மை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்