ஒரு லட்சத்தைக் கடந்த கொரோனா இறப்புகள்... 30 லட்சம் பேர்கள் பாதிப்பு: போராட்டத்தில் குதித்த மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பிரேசிலில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது, நோய் தொற்று 30 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 13 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 543 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பிரேசிலில் 905 பேர் மரணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மீதான விமர்சனம் அதிகரித்துள்ளது.

பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டதில்லை என பொதுமக்கள் பரவலாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

கொரோனாவை அவர் இதுநாள் வரை வெறும் குளிர் ஜுரம் என்றே கூறி வருகிறார். மட்டுமின்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் இருந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா பெருந்தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்த பிறகும் கூட,

அவர் அடிக்கடி மாஸ்க் இல்லாமல் பொதுக்கூட்டங்களில் சர்வசாதாரணமாக கலந்து கொள்கிறார், மட்டுமின்றி மக்கள் கூட்டத்தையும் கூட்டி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இருப்பினும் ஜனாதிபதியின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை, ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபனா கடற்கரையில் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் அடையாள சிவப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்