சீன நகரம் ஒன்றில் பொலிசார் திடீரென கொரோனா எச்சரிக்கை ஒன்றை விடுத்துவிட்டு உடனே அகற்றிவிட்டதால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Xinjiang மாகாணத்திலுள்ள Kashgar என்ற நகரத்தில் திடீரென விமான சேவை நிறுத்தப்பட்டது. பொலிஸ் அதிகாரிகள் சமூக ஊடகத்தில் திடீரென செய்தி ஒன்றை வெளியிட்டார்கள்.
அதில், மாஸ்க் அணியுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டதோடு, வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் பரப்பவேண்டாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் அந்த செய்தி அகற்றப்பட்டதால் மக்கள் குழப்பம் அடைந்தனர். பின்னர், 17 வயது பெண் ஒருவருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகள் அறிவித்தனர்.
அதைத் தொடர்ந்து உடனடியாக 4.75 மில்லியன் மக்கள் வாழும் அந்த பகுதியில் கொரோனா கண்டறியும் வேலை துவக்கப்பட்டது. ஞாயிறு மதியத்திற்குள் 2.84 மில்லியன் மக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் பரிசோதனைகள் செவ்வாயன்று துவங்க இருக்கின்றன.
பரிசோதனையில் 137 பேருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொற்றுக்களின் பின்னணியில் இருப்பது அந்த 17 வயது பெண்.
அந்த பெண் ஒரு ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். அவர் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆக, அவருடன் தொடர்பிலிருந்த 137 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எப்படி அந்த தொற்று ஏற்பட்டது, எப்படி பாதிக்கப்பட்ட அனைவருக்குமே அறிகுறிகள் இல்லாமலிருக்கிறது என்று பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், கொரோனா மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை உள்ளூர் அரசு துவக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, Kashgar பகுதியிலுள்ள நான்கு நகரங்கள் அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இது உள்ளூர் அளவிலான மற்றொரு புதிய கொரோனா பரவலாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.