அமேசான் காடுகளில் வாழும் ஆதிவாசிகள் நடுவில் கட்டுக்கடங்காமல் பரவியுள்ள கொரோனாவால், மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேசிலிலுள்ள அமேசான் காடுகளில் வாழும் ஆதிவாசி இனங்களில் ஒன்றான Yanomami இனத்தாரில், மொத்தம் 27,000 பேர் இருக்கிறார்கள்.
அவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம் உள்ளதாக அவர்களுடைய தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Yanomami ஆதிவாசிகள் வாழும் பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியில் கொரோனா ஆகத்துக்கும் அக்டோபருக்கும் நடுவில் 260 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில் 335ஆக இருந்த கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, பின்னர் 1,202ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். ஆதிவாசிகளைப் பொருத்தவரையில், சமூக விலகலை எல்லாம் எண்ணிக்கூட பார்க்கமுடியாது.
ஆக, பாதிக்கப்பட்டுள்ள 1,202 பேருடன் தொடர்பிலிருக்கும் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுவதையடுத்து, நிலைமை கைமீறிப்போய்விட்டதாக கருதப்படுகிறது.
பிரேசிலில், 300 ஆதிவாசி இனங்களைச் சேர்ந்த 800,000 பேர் வாழ்கிறார்கள். மொத்தத்தில், அவர்களில் 39,647 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள், 877 பேர் உயிரிழந்துள்ளார்கள் என பிரேசில் பூர்வக்குடியின மக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டுவோர்தான் காரணம் என கூறப்படுகிறது. ஆதிவாசிகள் முற்றிலும் வெளியுலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் என்பதால், அவர்களுக்கு நம்மைப்போல் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது.
ஆகவே, வெளியிலிருந்து செல்லும் இதுபோன்ற சமூக விரோதிகள் அவர்களிடமிருந்து இயற்கை வளத்தை திருடுவதுடன், அவர்களுக்கு நோய்த்தொற்றையும் கொடுத்துவிடுகிறார்கள்.