டென்மார்க்கில் கொரோனா அச்சம் காரணமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட விலங்குகள், புதைக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியே வருவதால் பீதி ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை பரப்பலாம் என்ற அச்சம் காரணமாக டென்மார்க்கில் பல மில்லியன் Mink என்னும் மர நாய் வகை விலங்குகள் கொல்லப்பட்டன.
டென்மார்க் விவசாயிகளுக்கு, கொல்லப்படும் ஒவ்வொரு Minkக்கும் ஒரு தொகையும், அவை 10 நாட்களுக்குள் புதைக்கப்பட்டால் போனஸும் வழங்கப்பட்டது.
அப்படி கொடுக்கப்பட்ட சலுகைதான் இப்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் விவசாயிகள் Minkகளைக் கொன்று லேசாக மண்ணைத்தோண்டி அவற்றை மேலோட்டமாக புதைத்துவிட்டனர்.
இப்போது, அவை மீண்டும் மண்ணிலிருந்து வெளியே தலைகாட்ட ஆரம்பித்துள்ளன. அதாவது, இறந்த Minkகளீன் உடல் அழுக ஆரம்பித்துவிட்டதால், அவற்றிலிருந்து வாயுக்கள் உருவாகி, உடல்கள் வீங்கத் தொடங்கியுள்ளதால், அவை மண்ணிலிருந்து வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
இது குறித்து மக்கள் பொலிசாருக்கு புகாரளிக்கத்தொடங்கியுள்ளதையடுத்து, அவற்றை அவர்கள் மீண்டும் புதைக்கத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில், இறந்த Minkகளால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் இல்லை என்றும் அவர்கள் மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் Mink இரத்தக்காட்டேரிகள் வரத்தொடங்கி விட்டன என்று செய்திகள் வெளியிட்டுள்ள மக்கள், இனி இதைக் குறித்து விரைவில் திரைப்படங்கள் வெளியாகும் என்று வேடிக்கையாக தெரிவித்துள்ளனர்.