ஸ்வீடனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சொந்த மகனை 28 ஆண்டுகள் பூட்டி வைத்து சித்தரவதை செய்ததாக நம்பப்படும் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பல ஆண்டுகளாக புற உலகத்துடன் எவ்வித தொடர்பும் இன்றி வாழ்ந்த இளைஞரை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பற்கள் உதிர்ந்த நிலையில் மீட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த இளைஞர் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொந்த தாயாரே மகனின் சுதந்திரத்தை மறுத்ததுடன், உடல் ரீதியாக துன்புறுத்தவும் செய்துள்ளதாக ஸ்டாக்ஹோம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஓலா ஓஸ்டர்லிங் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஸ்டாக்ஹோமின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல ஆண்டுகளாக அந்த இளைஞரை பூட்டி வைத்திருந்தனர் என்றே கூறப்படுகிறது.
ஆனால் 28 ஆண்டுகள் குறித்த இளைஞரை விலங்கிட்டபடி வைத்திருந்ததாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலை காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஓலா ஓஸ்டர்லிங் மறுத்துள்ளார்.
12 வயது முதல், பாடசாலைக்கு அனுப்பாமல் சொந்த மகனை குடியிருப்பினுள் பூட்டி வைத்ததாகவே ஊடகங்கள் வெளியிட்ட தகவல்.
தற்போது 70 வயதாகும் அந்த தாயார் மருத்துவமனை சென்ற வேளையில், நெருங்கிய உறவினர் ஒருவரே அந்த இளைஞரை கண்டுபிடித்துள்ளார்.
இரண்டு கால்களிலும் காயங்கள் காரணமாக நடக்கவே அவதிப்பட்டார். பற்கள் மொத்தமும் உதிர்ந்துள்ளது. மேலும் தற்போது 41 வயதாகும் அந்த நபருக்கு பேச வார்த்தை வரவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், மொத்த குற்றச்சாட்டுகளையும் அந்த தாயார் மறுத்துள்ளதாகவே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக சுத்தப்படுத்தாமல் விடப்பட்ட அறையிலேயே அந்த இளைஞரை தாம் கண்டதாக உறுவினர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
மிக மோசமான நிலையில் இருந்த அந்த அறையில் இருந்து தாங்க முடியாத வாடை வீசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞரை அந்த கோலத்தில் கண்டு தமது நெஞ்சு நொறுங்கியதாக கூறும் அந்த உறவினர், இளைஞரின் தாயார் கொடூர குணம் கொண்டவர் என தங்களுக்கு ஏற்கனவே தெரியும் எனவும்,
ஆனால் இந்த அளவுக்கு கொடூர குணம் கொண்டவர் என்பது தெரியாமல் போனது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டுமின்றி தமது உறவினர் மீட்கப்பட்டு, தற்போது குணமடைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.