பெல்ஜியத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முதியோர் இல்லத்திற்கு சென்ற கிறிஸ்துமஸ் தாத்தாவால் மொத்தம் 26 முதியவர்கள் கொரோனா தொடர்பான பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.
பெல்ஜியத்தின் Antwerp பகுதியில் அமைந்துள்ளது அந்த முதியோர் இல்லம். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முதியோர்களை மகிழ்விக்கவும் பரிசுகளை வழங்கும் பொருட்டும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட ஒருவர் அந்த இல்லத்திற்கு சென்றுள்ளார்.
டிசம்பர் 5 ஆம் திகதி நடந்த இந்த நிகழ்வினை அடுத்து, அந்த இல்லத்தில் தங்கியிருந்த 169 முதியவர்களில் 85 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதில் 26 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி அந்த இல்லத்தின் ஊழியர்களில் 40 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் தாம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியாமல், அந்த நபர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு முதியோர் இல்லத்திற்கு சென்றது பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளைப் போன்றே பெல்ஜியத்திலும் முதியோர் காப்பகங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவத் தொடங்கியது முதல் பெல்ஜியத்தின் முதியோர் காப்பகங்களில் மட்டும் 11,066 முதியவர்கள் இதுவரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.