தடுப்பூசி போடுவதில் மற்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி சாதித்துள்ள நாடு: சாத்தியமானது எப்படி?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
23008Shares

தடுப்பூசி போடுவதில் மற்ற நாடுகளை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளது இஸ்ரேல்! ஆம், அமெரிக்காவே இதுவரை தனது மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ள நிலையில், இஸ்ரேல், தன் நாடு மக்கள்தொகையில் 12 சதவிகிதம் மக்களுக்கு தடுப்பூசி போட்டாயிற்று.

சுமார் 1.4 மில்லியன் இஸ்ரேல் குடிமக்கள் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டாயிற்று, 8.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலின் மக்கள் தொகையில் இது கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும், மூன்று வாரங்களுக்குள்ளாகவே இத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் 146,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விடயம், மற்ற நாடுகள் பெரும்பாலும் இளைய தலைமுறையை விட்டுவிட்டு முதியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடும் நிலையில், இஸ்ரேலில் 20 வயது முதல் 40 வயது வரையுள்ள 100,000க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

மேற்கத்திய நாடுகளில் கூட இப்படி நடக்காத நிலையில், இஸ்ரேலில் இது எப்படி சாத்தியமாயிற்று? பைசர் மட்டுமின்றி மாடெர்னா மற்றும் ஆஸ்ட்ராசெனேகா நிறுவன தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனைகளில் இருக்கும்போதே, இஸ்ரேல் அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துவிட்டது.

வாங்கும் தடுப்பூசி பார்சல்கள் பிரிக்கப்பட்டு நாட்டின் தொலைவிலுள்ள இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

ஒரு பார்சல் பிரிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் நிலையில், ஐந்து பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டு மீதத்தை மற்ற நாடுகள் வீணாக எறிந்துவிடும் நிலையில், இஸ்ரேல் சுகாதார ஊழியர்கள் அந்த தடுப்பூசியை திட்டமிட்டுப் பிரித்து சரியாக ஆறு பேருக்கு போடுவதால், தடுப்பு மருந்தும் வீணாவதில்லை, ஒரு ஆளுக்கு உபரியாக தடுப்பூசியும் போட முடிகிறது.

பெரிய விளையாட்டுத்திடல்களில் தடுப்பூசி போட இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் தடுப்பூசி மையங்களில் மாலை வரை காத்திருக்கும் நிலையில், பெரியவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிந்து மீதமிருக்கும் தடுப்பூசி இளைஞர்களுக்கு போடப்படுகிறது என்பதால், இஸ்ரேல் இளைஞர்களுக்கும் தடுப்பூசி போடுவதை சாத்தியமாக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் தடுப்பூசிக்கு எதிரான போலி செய்திகள் பரவுவதை தடுக்க அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டவர்களுக்கு ‘பசுமை பாஸ்போர்ட்’ ஒன்று வழங்கும் திட்டமும் உள்ளது, இதனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம், அத்துடன் நாடு திரும்பும்போது அவர்கள் தங்களை தனிமைப்படுத்த தேவையும் இல்லை.

ஆக, ஜனவரி முடியும்போது இஸ்ரேல் தன் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு, அதாவது சுமார் இரண்டு மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட்டு முடித்திருக்கும்.

இஸ்ரேல் இவ்வளவு திறம்பட தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒரு அரசியல் நோக்கமும் உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது.

காரணம், மார்ச் மாதம் இஸ்ரேலில் தேர்தல் நடைபெற உள்ளது. 2009 முதல் இஸ்ரேல் பிரதமராக பதவி வகித்துவரும் Benjamin Netanyahu, இந்த தடுப்பூசி திட்டத்தின் வெற்றியை தனது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விடயமாக வைத்துக்கொள்ளவும் சாத்தியம் உள்ளது எனலாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்