பொலிஸ் காவலில் கருப்பின இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்... வெடித்த கலவரம்: வாகனத்துடன் சிக்கிய மன்னர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
289Shares

பெல்ஜியத்தில் கொரோனா விதிகளை மீறியதாக கூறி கைதான கருப்பின இளைஞர் பொலிஸ் காவலில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் தலைநகர் Brussels-ல் கலவரம் வெடித்துள்ளது.

கலவரக்காரர்களிடையே சிக்கிய பெல்ஜியம் மன்னரின் வாகனம் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெல்ஜியம் மன்னர் Phillipe அவரது உத்தியோகப்பூர்வ இல்லமான Laeken அரண்மனைக்கு செல்லும் வழியிலேயே கலவரக்காரர்களிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், துரிதமாக செயல்பட்ட மன்னரின் பாதுகாப்புப்படையினர், அவரை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் போது 500-கும் அதிகமான மக்கள் கொந்தளிப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது. சிலர் கருப்பினத்தவர் உயிரும் பிரதானமே என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

23 வயதான இப்ராஹிமா பாரி என்ற கருப்பின இளைஞர் பொலிஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரில் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் ஒரு கட்டத்தில் கலவரமாக வெடித்துள்ளது என கூறப்படுகிறது.

நகரின் தெருக்களில் நான்குக்கும் மேற்பட்டோர் கூடுவதற்கான வரம்பை மீறியதற்காக இளைஞர் பாரி சனிக்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இளைஞர் பாரி கைது செய்யப்பட்டதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். மட்டுமின்றி அன்றைய நாள் நூறுக்கும் மேற்பட்டோர் கைதானதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொலிஸ் காவலில் இளைஞர் பாரி மரணமடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பொதுமக்கள் ஊரடங்கு விதிகளை மீறி தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இளைஞர் பாரி மரணமடைந்ததாக கூறப்படும் காவல் நிலையத்தையும் கலவரக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இதுவரை 30 சிறுவர்கள் உட்பட மொத்தம் 116 பேர்களை கலவரம் தொடர்பில் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இளைஞர் பாரி இறந்ததற்கான உண்மையான காரணத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்