ரஷ்ய ஜனாதிபதி புடின் எதிர்ப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்ஸி நவல்னி, ஜேர்மனியில் சிகிச்சை முடித்து திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலெக்ஸி நவல்னி வந்த விமானம் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள Sheremetyevo விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்பட்டி ஞாயிறு இரவு தரையிறங்கியது.
முன்னதாக Vnukovo விமான நிலையத்தில் அவர் இறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது திரளான ஆதராவாளர்கள் Vnukovo விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.
இதனையடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், விமானத்தை Sheremetyevo விமான நிலையத்திற்கு திருப்பி விட்டனர்.
மட்டுமின்றி, திரண்டிருந்த நவல்னி ஆதரவாளர்களை பொலிசார் அப்புறப்படுத்தவும், பலரை கைது செய்தும் கூட்டத்தை கலைத்துள்ளனர்.
அதேவேளை, மாஸ்கோ விமான நிலையத்தில் வைத்து நவல்னி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விமான பயணத்தின்போது, மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார்.
அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக ஜேர்மனி கொண்டுசெல்லப்பட்டார்.
தம்மை கொல்ல ஜனாதிபதி புடினே ஆணை பிறப்பித்திருக்கலாம் என குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நவல்னி,
தற்போது குணமடைந்து ரஷ்யா திரும்பியுள்ளார். இந்த நிலையிலேயே, நவல்னி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசார் அழைத்து செல்வதற்கு முன்னர் தமது மனைவிக்கு முத்தமிட்டுள்ளார். மேலும் சட்டத்தரணிகளை தொடர்புகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், நவல்னியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,
அவரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார்.