ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் இராணுவ விமானத் தளத்தில் சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாக்தாத்திற்கு வடக்கே balad-ல் உள்ள ஈராக் இராணுவ விமானத் தளத்தில் பல ராக்கெட்டுகள் தாக்கியதில் ஒரு ஈராக் காண்ட்ராக்டர் காயமடைந்ததாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்தவொரு குழுவும் உடனடியாக இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஒரு வாரத்திற்குள் ஈராக்கில் அமெரிக்க படைகள் தங்கியிருக்கும் தளம் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
நான்கு ராக்கெட்டுகள் balad தளத்தைத் தாக்கியதாக ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்ற தாக்குதலுக்கு ஈரான் ஆதரவுப்பெற்ற சில குழுக்கள் பொறுப்பேற்றதாக ஈராக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த வாரம் எர்பில் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில் அமெரிக்க படைகளுடன் பணிபுரிந்த காண்ட்ராக்டர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
ஈராக்கில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க படைகள் உட்பட அனைத்து வெளிநாட்டு படைகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈரான் ஆதரவுப்பெற்ற குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.