எத்தியோப்பியா நாட்டில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வரும் புனித பேழையை கொள்ளையிட வந்த கும்பலால் மொத்தம் 800 பேர் வரை கொல்லப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு சார்பு படையினருக்கும் கிளர்ச்சிப் போராளிகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் Axum என்ற இடத்தை நெருங்கிய நிலையில்,
புனித பேழை பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படும் தேவாலயத்தைப் பாதுகாக்க வழிபாட்டாளர்கள் விரைந்துள்ளனர்.
எத்தியோப்பியாவின் புனிதமான நகரமாக கருதப்படும் ஆக்சம் பகுதியிலேயே குறித்த தேவாலயமும்,
அதனுள்ளே பல காலமாக பாதுகாக்கப்படும் புனித பேழையும் உள்ளது. குறித்த பேழையை கொள்ளையிடும் நோக்கில் நடந்த கொடூர வன்முறையில், சுமார் 800 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த கொலைவெறிச்சம்பவம், தற்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை இதுவரை தடை செய்திருந்ததால், குறித்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியாமல் போனது.
சம்பவத்தன்று திடீரென்று துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் புனித பேழையை பாதுகாக்கும் பாதிரியார்கள் மற்றும் அங்குள்ள மற்றவர்களுக்கு ஆதரவளிக்க தேவாலயத்திற்கு விரைந்துள்ளனர்.
பெருந்திரளாக குவிந்த மக்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்துள்ளதாக உயிர் தப்பிய பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேவாலயத்திலும், அதன் சுற்றுவட்டார தெருக்களிலும் சடலங்கள் பல நாட்கள் கிடந்துள்ளது என கூறும் அந்த பாதிரியார், கண்டிப்பாக சுமார் 800 பேர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றார்.
எந்த இரக்கமும் காட்டாத அந்த கும்பல், மொத்தமாக கொன்று குவித்துவிட்டு, கொள்ளையிட்டு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார் அவர்.
இவை மொத்தமும் அரசு சார்பு படைகளே செய்துள்ளதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்படும் கொள்ளை எனவும் அப்பகுதி பல்கலைக்கழக ஆசிரியர் Getu Mak தெரிவித்துள்ளார்.