2 மணி நேரம் தான்... வாருங்கள்: ரயிலில் புறப்பட தயாரான கிம் ஜாங் இடம் விமான ஆசை காட்டிய டிரம்ப்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ விமானமான Air Force Oneல் டொனால்டு டிரம்ப் லிஃப்ட் கொடுக்க முன்வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது டொனால்ட் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹனோய் நகரில் நடந்த ஒரு உச்சிமாநாட்டிற்குப் பிறகு Air Force Oneல் லிஃப்ட் கொடுக்க முன்வந்ததாக பிபிசி ஆவணப்படம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகளையும், வல்லரசு நாடுகளுக்குமே சவால் விட்டு வரும் தேசமாக விளங்குகிறது வட கொரியா.

இதன் காரணமாக பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் சளைக்காமல் உலக நாடுகளுக்கு போக்கு காட்டி வருகிறார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்.

அப்பேர்பட்ட கிங் ஜாங் உன்னை நேரில் சந்தித்து அணு ஆயுதங்களை கைவிடும்படி 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் இருமுறை சந்தித்து பேசினார் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.

2018ல் சிங்கப்பூரிலும், 2019ம் ஆண்டு வியட்நாம் தலைநகர் ஹானோயிலும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடந்தது.

இந்த நிலையில் 2019ம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு பிறகு வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை அவரது நாட்டிற்கே கொண்டு சென்று இறக்கி விடுவதாக டொனால்ட் டிரம்ப் கூறியதாக தெரியவந்தது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ விமானமான Air Force One-ல் டிரம்ப் சென்றிருந்த நிலையில்,

வட கொரிய தலைவர் கிம்மோ, சீனா வழியாக 60 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து வியட்நாமை அடைந்தார்.

விமானத்தில் மிக விரைவாக வியட்நாம் சென்றிருக்க முடியும் என்றாலும் அவர் தனது தந்தையின் வழியை பின்பற்றி ரயில் மூலமாக வியட்நாம் சென்றதாக கூறப்படுகிறது.

"Trump Takes on the World" என்ற தலைப்பிலான பிபிசியின் ஆவணப் படத்தில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிம் ஜாங் உன்னை Air Force One-ல் ஏற்றி வட கொரியாவில் இறக்கி விடுவதற்கு முன்வந்ததன் மூலம் டொனால்ட் டிரம்ப் மிகவும் அனுபவமுள்ள இராஜதந்திரிகளைக் கூட திகைக்க வைத்தார் என கூறப்படுகிறது.

இருப்பினும் டிரம்பின் கோரிக்கையை கிம் ஜாங் உன் ஏற்கவில்லை. அவர் ரயிலில் செல்லவே விரும்பினார்.

ஒரு வேளை கிம் ஜாங் உன், டிரம்பின் கோரிக்கையை ஏற்றிருந்தால் அவர் Air Force One-ல் ஏறி வட கொரியாவுக்கு சென்றிருப்பார்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அந்த விமானம் வட கொரிய எல்லைக்குள் பயணிக்க வேண்டியதிருந்திருக்கும், அது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு கிம் ஜாங் உன், சீன விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.

அப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 1.5 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான தமது உத்தியோகப்பூர்வ வாகனமான "The Beast" என்றழைக்கப்படும் காடிலாக் காருக்குள் கிம் ஜாங்கை ஏற்றி அது பற்றி விளக்கிக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்