2020ம்ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசினை அமெரிக்காவை சேர்ந்த கவிஞர் லூயிஸ் க்ளக் பெற்றுள்ளார்.
அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிற 77 வயதான லூயிஸ் க்ளக் 1968 இல் "முதல் குழந்தை" என்கிற கவிதை தொகுப்பின் மூலம் அறிமுகமானார்.
இவரது கவிதைகள் குழந்தை பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் பெற்றோர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மையமாகக் கொண்டுள்ளதாக நோபல் பரிசுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், "அவரது கவிதைகளில், சுயமானது அதன் கனவுகள் மற்றும் பிரமைகளில் எஞ்சியிருப்பதைக் கேட்கிறது, சுயத்தின் மாயைகளை எதிர்கொள்வதில் க்ளக்கினை விட யாரும் சிறந்தவராக இருக்க முடியாது” என குழுவினர் க்ளக்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
கடினமான அழகுடன் தனிப்பட்ட இருப்பை உலகளாவியதாக மாற்றும் அவரது தெளிவற்ற கவிதை குரல் அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளதாக பொதுவாக அறியப்படுகின்றது.
மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றிற்கான நோபல் பரிசுகள் இந்த வார தொடக்கத்தில் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசானது நாளை அறிவிக்கப்பட உள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.