உலக ஆக்கி லீக் இறுதி சுற்று: இந்திய அணி மீண்டும் அதிர்ச்சித் தோல்வி

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

3-வது மற்றும் கடைசி உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் எல்லா அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

4-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் டிரா (1-1) கண்டு இருந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோற்று இருந்தது. ஜெர்மனி அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முந்தைய ஆட்டங்களில் ஜெர்மனி அணி இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலியாவுடன் டிரா கண்டு இருந்தது.

ஜெர்மனி அணியில் மார்ட்டின் ஹானெர் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 17-வது நிமிடத்திலும், மேட்ஸ் கிராம்புஸ்ச் 20-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி கடைசி வரை போராடியும் பதில் கோல் திருப்பவில்லை.

முன்னதாக நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி தனது 3 ஆட்டங்களிலும் டிரா கண்டுள்ளது. இங்கிலாந்து அணி ஒரு தோல்வி, ஒரு வெற்றி, ஒரு டிரா கண்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா-ஸ்பெயின் (மாலை 5.30 மணி), பெல்ஜியம்-நெதர்லாந்து (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

- Daily Thanthi

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்