ஐபிஎல் சூதாட்டத்தை அம்பலப்படுத்திய பொலிஸ் அதிகாரி திடீர் தற்கொலை

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவின் மும்பை நகரில் நிழல் உலக தாதாக்களுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிம்மசொப்பனமாக விளங்கிய பொலிஸ் அதிகாரி ஹிமன்ஷூ ராய் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

மும்பையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஹிமன்ஷூ ராய்(54). இவர் மிகவும் நேர்மையாக செயல்பட்டு, பல்வேறு சவாலான வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்தவர்.

கடந்த 2013ஆம் ஆண்டு மும்பையை அதிர வைத்த ஐபிஎல் சூதாட்ட மோசடியை இவர் தான் அம்பலப்படுத்தினார். இந்த வழக்கின் பின்னணியில் இருந்த பல பிரபலங்கள் குறித்து விசாரித்தார்.

இதே போல், மும்பையின் பிரபல பத்திரிக்கையாளர் ஜே டே-வின் கொலை வழக்கையும் இவரே விசாரித்தார். அதன் பின்னர், சோட்டா ராஜன் கும்பலால் ஜே டே கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தார்.

மேலும், மும்பையை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்த பல நிழல் உலக தாதாக்களை அடுத்தடுத்து கைது செய்தார்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியாக வலம் வந்தார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் காவல்துறையில் இவர் முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஹிமன்ஷூ, அடிக்கடி விடுப்பில் சென்றுள்ளார்.

அத்துடன், ஹிமான்ஷூ புற்றுநோய் பாதிப்புக்கும் ஆளாகி இருந்ததால், நீண்ட விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

ஹிமான்ஷூ ராய் மறைவுக்கு காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்