ஒட்டுமொத்த தேசமும் கேலிக்கூத்தாகியுள்ளது! மலிங்கா மனைவியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த திசரா பெரேரா

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மலிங்கா மனைவி தன்யாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு திசரா பெரேரா கடிதம் எழுதியுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் அணிக்கு திரும்பினார். அத்துடன் அணித்தலைவர் பதவியும் மலிங்காவுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு முன்பு சண்டிமால் ஒருநாள் அணிக்கும், திசரா பெரேரா டி20 அணிக்கும் கேப்டனாக செயல்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரை பெரேரா சந்தித்து, உலகக் கிண்ண பொட்டிக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்ய முயற்சிப்பதாக கேப்டன் மலிங்காவின் மனைவி பேஸ்புக் பக்கத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரேராவின் மனைவி ஷெராமி அந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்ததால் பேஸ்புக் போர்க்களமாகியது. இதனைத் தொடர்ந்து, தற்போது திசரா பெரேரா இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘கேப்டன் பதவியில் இருப்பவரின் மனைவி இது போன்று சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டுவது, மக்களிடம் என்னைப் பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி விடும். அவரது ‘பேஸ்புக்’ பதிவுக்கு பிறகு வீரர்களின் ஓய்வறையில் அசவுகரியமான சூழல் நிலவுகிறது.

உண்மையை கூற வேண்டும் என்றால், இரு மூத்த வீரர்கள் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கும்போது, இளம் வீரர்களுக்கு அது நல்ல அனுபவமாக இருப்பதில்லை. தலைமை பண்பு என்பது அணிக்குள் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது ஆகும்.

இதுபோன்ற தேவையற்ற சமூக வலைதள சர்ச்சைகளை தவிர்த்து, விரைவில் தொடங்க இருக்க இருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மீதே இப்போது நமது கவனம் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்து வலுவான கேப்டன்ஷிப்பின் கீழ் அணி பயணிக்க வேண்டியது அவசியம்.

கேப்டனும், மூத்த வீரர்களும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். தனிப்பட்ட நபரின் பழிவாங்கும் நடவடிக்கையால் ஒட்டுமொத்த தேசமும் கேலிக்கூத்தாகியுள்ளது. தற்போதைய சூழலில் இதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்து அணிக்குள் ஒற்றுமையையும், நம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு தனது செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers