உலக கிண்ணம் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட கூடாது: சிசிஐ அமைப்பு வலியுறுத்தல்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக உலக கிண்ணம் தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியினை இந்திய அணி தவிர்க்க வேண்டும் என சிசிஐ அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் நபர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த கொடூரமான சம்பவத்திற்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் உலக கிண்ணம் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் உடனான போட்டியினை தவிர்க்க வேண்டும் என மும்பையிலுள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (சிசிஐ) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் சிசிஐ-யின் செயலாளர் சுரேஷ் பஃப்னா, பாகிஸ்தான் நாட்டின் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தாக்குதல் குறித்து அமைதி காப்பது பெரும் தவறை காட்டுகிறது.

எங்கள் இராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஊழியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நாங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம். சி.சி.ஐ என்பது ஒரு விளையாட்டு சங்கம் என்றாலும், விளையாட்டுக்கு முன்பு நாடு தான் எங்களுக்கு முக்கியம்.

பாகிஸ்தான் பிரதமர் வாய் திறந்து பேச வேண்டும். பாகிஸ்தான் மீது எந்த தவறும் இல்லை என்றால், இம்ரான் கான் ஏன் இன்னும் அமைதியாக இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தாக்குதல் குறித்து வெளிப்படையாக அவர் கருத்துத் தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். அவ்வாறு வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள் மீது கறை படிந்திருக்கிறது என்றுதானே பொருள் என பேசியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்