தேர்தலில் மக்களின் வரிப் பணத்தை விடுத்து சொந்த பணத்தை செலவிடுங்கள்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அரசியல் கட்சிகள் தேர்தலில் மக்களின் வரிப் பணத்தை எடுத்து செலவு செய்வதைக் காட்டிலும், தங்கள் சொந்தப் பணத்தை எடுத்து தேர்தலில் செலவிடலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாளேடுகளில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த விளம்பரத்தை, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இன்றைய செய்தித்தாள்களைப் பார்க்கும் போது ஆம் ஆத்மி கட்சியின் விளம்பரங்கள் தான் எங்கும் இருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவால் குறித்த விளம்பரங்களாக இருக்கின்றன.

வரி செலுத்துபவர்களின் பணம் அக்கறையின்றி செலவு செய்யப்படுகிறதா? ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாரேனும் ஒருவர் விளக்கம் அளிக்க முடியுமா. தேர்தலில் போட்டியிடக் கூட முதல்வருக்கு பணம் இல்லை என்று நினைத்தோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு ட்விட்டில் அவர் கூறுகையில், ‘பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட தங்களின் தேர்தல் விளம்பரச் செலவுகளை, வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து செலவு செய்வதை விட தங்களின் சொந்த பணத்தில் இருந்து செலவழிக்க வேண்டும்.

வரி செலுத்துவோரின் பணம் வளர்ச்சிக்காகவும், சாமானிய மக்களின் முன்னேற்றத்துக்காகவும் மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்