உலக காதுகேளாதோர் யூத் பேட்மிண்டன் போட்டி.. தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக மாணவி!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

தைவானில் நடைபெற்ற உலக காதுகேளாதோருக்கான யூத் பேட்மிண்டன் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கம் வென்றுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஜெய ரட்சகன் என்பவரின் மகள் ஜெர்லின் அனிகா(14), தைவானில் நடைபெற்ற உலக காதுகேளாதோர் யூத் பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய அவர், இறுதிப்போட்டியில் ஜேர்மனியின் Finja Rosendahlஐ எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய ஜெர்லின் 21-12, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்று அசத்தினார்.

மேலும் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் பங்குபெற்று வெள்ளி வென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, நாடு திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெய ரட்சகன் கூறுகையில், ‘ஜெர்லின் 8 வயதில் இருந்து பேட்மிண்டன் விளையாடி வருகிறார். பெரும்பாலான நேரத்தினை தனது பயிற்சிக்காகவே அவர் செலவிட்டுள்ளார்.

காது கேளாதவராக இருப்பது கவனச்சிதறல் இல்லாமல் விளையாட்டில் கவனம் செலுத்த உதவுவதாக அவர் கூறுகிறார். காலை 5 மணிக்கே பயிற்சியை தொடங்கும் ஜெர்லின், 8 மணி முதல் 1 மணி வரை பள்ளிக்கு செல்கிறார். முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டால் ஒலிம்பிக்கிலும் ஜெர்லின் கலந்து கொண்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

ஜெர்லின் அனிகாவின் லட்சியம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே ஆகும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்