கட்டாய சமையல் வேலை... பானிபூரி விற்பனை: 17 வயது இரட்டை சத நாயகனின் மறுபக்கம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் இரட்டை சதம் விளாசிய மும்பை அணியின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

50 ஓவர் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை நேற்று நிகழ்த்தியுள்ளார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹோதி பகுதியில் ஒரு சிறிய கடை ஒன்றை நடத்திவருகிறார் ஜெய்ஸ்வாலின் தந்தை.

சிறு வயது முதலே கிரிக்கெட் என்றால் அத்தனை ஆர்வம். அவனது ஆர்வம் மற்றும் களத்தில் காட்டும் அர்ப்பணிப்பைக் கண்ட சில சீனியர்கள், `நீ இங்கு இருந்தால் ஜொலிக்க முடியாது. கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வர வேண்டும் என்றால் மும்பை செல்ல வேண்டும்’ என்றனர்.

அங்கு அவரின் மாமா வீட்டில் தங்கினார் ஜெய்ஸ்வால். ஆனால் அவரால் அங்கு ஒரு மாதம் மட்டுமே தங்க முடிந்தது. அது மிகச் சிறிய வீடு என்பதால், அந்த வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் பால் பொருள்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் 12 வயதில் பணிக்குச் சேர்ந்தார்.

ஆனால், கடையில் இருக்கும் அதிகப்படியான பணியால் அவரால், கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. காலை 5 மணிக்கு எழுந்து பயிற்சிக்குச் செல்ல வேண்டும். மதியம் வந்து கடையில் பணியாற்ற வேண்டும்.

பயிற்சி முடிந்து சில நாள்கள் ஜெய்ஸ்வால் தாமதமாக வருவதாக குற்றம்சாட்டிய கடையின் உரிமையாளர் அவரை வேலையிலிருந்து துரத்தினார்.

(Twitter)

இதைத்தொடர்ந்து, மும்பையில் புகழ்பெற்ற குழந்தைகள் கிரிக்கெட் பயிற்சி பெறும் ஆசாத் மைதானம் வந்து சேர்ந்தார்.

அங்கு இம்ரான் என்னும் நபரை சந்தித்தார். இங்கு சிறப்பாக கிரிக்கெட் விளையாடினால் மைதானத்தில் இருக்கும் டென்ட்டில் தங்க அனுமதிப்பேன் அவர் சொல்ல தனது ஆட்டம் மூலம் 3 வருடங்கள் அங்கே தங்கியுள்ளார்.

பயிற்சி மைதானத்துக்கு எளிதில் செல்லலாம் என்பதைத் தவிர அங்கும் அவருக்கு எல்லாம் சரியாக அமையவில்லை.

டென்ட்டில் அவர் தோட்டப் பணி செய்யும் நபர்களுடன்தான் தங்கியிருந்தார். பயிற்சி நேரம் போக மீதி நேரங்களில் அந்தப் பணியாளர்களுக்காக சமைப்பது உள்ளிட்ட பணிகள் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்.

தவிர தனியாக அங்கு கழிவறை வசதி கூட இல்லை. அங்கு தன்னுடையை கவலைகளைச் சொல்லக்கூட ஆள் இல்லாமல் இருந்துள்ளார் ஜெய்ஸ்வால்.

இந்த நிலையில் கையில் காசு இருந்தால் மகனுக்கு கொஞ்சம் செலவுக்கு அனுப்புவார் தந்தை. ஆனால், அது ஜெய்ஸ்வாலுக்கு போதுமானதாக இல்லை.

இதனால் அசாத் மைதானத்தில் இரவு நேரங்களில் பானி பூரி விற்கும் பணி செய்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், பல நாள்கள் பானிபூரி விற்றும் வெறும் வயிற்றில் பசியோடுதான் படுத்தேன் என அந்த நாள்களை நினைகூர்கிறார் ஜெய்ஸ்வால்.

ஆனால், எந்த நிலையிலும் மும்பையில் தான் படும் கஷ்டங்களை தன் பெற்றோருக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்