கடும் சிக்கலில் பிரபல கால்பந்து நட்சத்திரம்: சிறைத் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
261Shares

பாலியல் பலாத்காரம் தொடர்பில் பிரபல பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ராபின்ஹோவுக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை இத்தாலிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இத்தாலியின் மிலன் நகரில் இரவு விடுதி ஒன்றில் அல்பேனிய இளம் பெண்ணை தாக்கிய விவகாரத்தில் 2017 ஆம் ஆண்டு பிரேசில் கால்பந்து நட்சத்திரம் ராபின்ஹோவுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது 36 வயதாகும் ராபின்ஹோ குறித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார். பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படும் 23 வயது அல்பேனிய இளம்பெண் சம்பவத்தின் போது மது அருந்தி இருந்ததாகவும், இருவரும் ஒப்புக்கொண்ட பின்னரே உறவு நடந்ததாகவும் ராபின்ஹோ தரப்பு வாதிட்டுள்ளது.

மட்டுமின்றி, என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு குறித்த பெண் மது அருந்தியிருந்தார் என்றே ராபின்ஹோ தமது நண்பர்களிடமும் தெரிவித்திருந்தார்.

சம்பவம் நடந்த ஜனவரி 22, 2013-ல் AC Milan அணிக்காக விளையாடி வந்த ராபின்ஹோ, தமது மனைவி உள்ளிட்ட 6 பேர் கொண்ட ஒரு குழுவுடன் இரவு விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளார்.

அதே விடுதியில் குறித்த அல்பேனிய இளம்பெண் தமது நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தமது மனைவியை குடியிருப்புக்கு அனுப்பி வைத்துவிட்டு, ராபின்ஹோ நண்பர்களுடன் மீண்டும் மது அருந்தியுள்ளார்.

மட்டுமின்றி, பிறந்தநாள் கொண்டாடும் அந்த இளம்பெண்ணையும் தங்கள் கூட்டத்தில் இணைத்துக் கொண்டு அவர் சுயநினைவை இழக்கும் மட்டும் மது அருந்த வைத்துள்ளனர்.

அதன் பின்னர் குறித்த பெண்ணை தனிப்பட்ட அறை ஒன்றில் அழைத்துச் சென்று, ராபின்ஹோ மற்றும் அவரது நண்பர் ஒருவரும் துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராபின்ஹோவின் நான்கு நண்பர்களும் குறித்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக இத்தாலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இந்த விவகாரம் தொடர்பில் 2014-ல் கைதான ராபின்ஹோ, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

தற்போது ராபின்ஹோவுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இழப்பீடாக குறித்த பெண்ணுக்கு 73,000 டொலர் வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும், இன்னும் 90 நாட்களுக்குள் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் ராபின்ஹோ மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்