பல வருடங்களுக்கு முன்னர் முத்தையா முரளிதரன் பந்து வீச்சு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இயன் ஹீலி 25 ஆண்டுகள் கழித்தும் தற்போது காழ்ப்பை உமிழும் வகையில் பேசியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன்பாக 1995-ம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இலங்கையின் முத்தையா முரளிதரன் பவுலிங்கை அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர் த்ரோ என்று கூறி நோ-பால் என்று தீர்ப்பளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
இதோடு மட்டுமல்லாமல் ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய நடுவர் ராஸ் எமர்சனும் முரளிதரன் வீசும் போது நோ-பால் என்று அழைத்தார். காரணம் த்ரோ என்றார். இதனையடுத்து முரளிதரன் பவுலிங் வீசும் போதெல்லாம் அவுஸ்திரேலிய ரசிகர்கள் நோ-பால் நோ-பால் என்று கத்தி அவரை கடும் ஏளனம் செய்தனர்.
இதனையடுத்து முரளிதரன் பந்து வீச்சு சோதனைக்குட்படுத்தப்பட்டு அவர் முழங்கை அளவுக்கு மீறி வளைகிறது என்று முடிவு கட்டி, அவர் பந்து வீச்சைத் ‘திருத்தினர்”. அதன் பிறகு உலகச் சாதனையாளராகி 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி யாரும் முறியடிக்க முடியாத ஒரு பவுலிங் சாதனையில் பவுலிங் டான் பிராட்மேனாக அவர் திகழ்கிறார்.
மேலும் நேதன் லயன் இன்று இத்தனைப் பிரமாதமாக வீசுகிறார் என்றால் அதற்கு முத்தையா முரளிதரன் அவருக்கு அளித்த பயிற்சியே காரணம், இப்படியிருந்தும் ஆஸ்திரேலிய அப்போதைய அணி வீரர்களுக்கு முரளிதரன் மீதான காழ்ப்பு இன்னமும் நீங்கவில்லை. முரளிதரன் கை இயல்பாகவே வளைந்திருக்கும் ஒன்று என்பது தெரிந்தும் முரளி அவமானப்படுத்தப்பட்டார்.
இன்றைய தினம் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு முன்னாள் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இயன் ஹீலி கூறும்போது கூட அவரிடம் பழைய காழ்ப்பு மறையவில்லை.
முத்தையா முரளிதரன் பவுலிங் குறித்த சர்ச்சைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு கிரிக்கெட் தன்னை தயார் செய்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. அப்போது அவரைப்பற்றி ஏகப்பட்ட ஊகச்செய்திகள் வந்தன.அப்போதே நிச்சயம் அவர் த்ரோ செய்கிறார் என்ற உண்மை ஒருநாள் வெளிப்படும் என்றே நான் கருதினேன். நிச்சயம் யாரோ ஒருவர் விதிமுறையைக் கடைப்பிடித்து த்ரோ என்று அழைப்பார்கள் என்று உறுதியாக நம்பினோம்.
சோதனையிலும் அவர் கை மடங்குவது உறுதி செய்யப்பட்டது எனக்கு மகிழ்ச்சியே. அப்போது இதனை எதிர்கொள்ள போதிய விதிகள் இல்லை.
முரளிதரன் பந்து வீச்சு மீது அனைவருக்கும் சந்தேகம் எழவே செய்தது. டேரல் ஹேர் ஏறக்குறைய சரியாகவே த்ரோ என்று கணித்தார். ஏற்கெனவே எச்சரிக்கைகள் இருந்தன, பலரும் எச்சரித்திருந்தனர், இலங்கை அணி மெல்போர்னில் இது நடக்கும் என்று பதற்றமாகவே இருந்தனர்.
அன்றைய தினம் நடுவர் டேரல் ஹேர் விடுதி வாசலில் நின்று கொண்டிருந்த போது, நான் அவரிடம், ‘நீங்கள் மிகச்சரியாகவே த்ரோ என்று நோ-பால் என அழைத்தீர்கள்’ என்று கூறினேன்.
முரளிதரன் பெரிய ஆஃப் ஸ்பின் பந்துகளை வீசக்கூடியவர், ஆனால் அதே ஆக்ஷனில் ஒரு பந்து திரும்பாமல் எதிர்த்திசையில் திரும்பும் அல்லது நேராகச் செல்லும். அப்போது இலங்கையில் அவர் பெரிய பவுலர், ஆனால் அவுஸ்திரேலியாவில் அவர் சராசரியான பவுலரே” என்று இன்றும் கூட இயன் ஹீலி முத்தையா முரளிதரன் மீதான காழ்ப்பைக் உமிழ்ந்துள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்