கிழக்கு மாகாணத்தில் 4 பாடசாலைகளை தேசியக் கல்லூரிகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்துள்ளார்.
வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தன்னை கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு தேவையான தரங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியன பூர்த்தி செய்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதற்கான அனுமதியினை வழங்கியுள்ளதாக ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.