ரஜினிகாந்த் கட்சியின் பெயர் மக்கள் சேவைக் கட்சி, ஆட்டோ சின்னம் என்பது உண்மையா?

Report Print Fathima Fathima in அரசியல்
66Shares

நடிகர் ரஜினிகாந்த் இம்மாதம் 31ஆம் தேதி புதிய கட்சி தொடங்கப்படும் தேதி மற்றும் பிற விவரங்கள் வெளியிடப்படும் என இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 'மக்கள் சேவை கட்சி' என்ற அரசியல் கட்சியின் பெயரை ரஜினி பயன்படுத்துவார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக ரஜினியின் தரப்பில் எவ்வித தகவலும் உறுதிப்படுத்தாதபோதும், மக்கள் சேவை கட்சி என கடந்த செப்டம்பர் மாதம் பெயர் மாற்றம் செய்த அக்கட்சி, இதற்கு முன்பு 'அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்' என்ற பெயரில் இயங்கி வந்தது தேர்தல் ஆணையத்தில் பதிவான தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில், தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னங்கள் தொடர்பான ஆணையை தேர்தல் ஆணையம் டிசம்பர் 14ஆம் தேதி பிறப்பித்தது. அதில் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான விண்ணப்பத்தில் 'இரு விரல் ஹஷ்ட முத்திரை 'அல்லது 'பாபா முத்திரை' சின்னத்தை ஒதுக்குமாறு அந்த கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான கை சின்னத்தை பிரதிபலிப்பதாக இருப்பதால் அந்த சின்னத்தை ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம், விண்ணப்பததாரரின் மற்றொரு தேர்வான ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது.

இத்துடன் இந்திய அளவில் பிற அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணையம் டிசம்பர் 14ஆம் தேதி ஒதுக்கியிருந்தது.

கட்சி தொடங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

இந்திய மக்களவை, சட்டமன்றம் அல்லது உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட எந்தவொரு இந்தியருக்கும் தகுதி உள்ளதாக வரையறுக்கும் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சியாக இருந்தால் அதை தொடங்குவதற்கான விதிகளையும் வகுத்துள்ளது.

கட்சி தொடங்க விரும்புவோர், அடிப்படையில் கட்சி தொடங்குவதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும்.

அதில் எந்தவொரு மதத்தையோ ஜாதியையோ குறிப்பிடாத வகையில் கட்சியின் பெயர், இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட விதிகளை கொண்ட கட்சியின் நோக்கங்கள், 18 வயதை பூர்த்தி செய்த இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பட்டியல், கட்சியின் நிர்வாகிகளுக்கான அதிகாரங்கள், நிர்வாகிகள் நியமனம், ஜனநாயக முறையில் இயங்கக்கூடிய நியமன நெறிகள் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

திகபட்சமாக ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட தலைமை மற்றும் தேர்தல் விதிகள், பிரச்னை ஏற்படும் காலத்தில் தீர்வை எட்டக்கூடிய தீர்மான விதிகள், ஒழுங்கு நடவடிக்கை விதிகள், முடிவெடுக்கும் அதிகாரங்களின் நடைமுறை, அரசியல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கட்சி நிதி, வேறு கட்சியில் இணைவது அல்லது மற்ற கட்சி இந்த கட்சியில் இணையும்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் போன்ற விவரங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ரூ. 2 மதிப்பிலான பத்திரத்தில் "நான் பதிவு பெற்ற வாக்காளர். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற வேறு எந்த கட்சியிலும் நான் உறுப்பினராக இல்லை" என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

இந்த பிரமாண பத்திரத்தில் முதல் நிலை நடுவர் நீதிமன்ற நீதிபதி அல்லது அத்தாட்சி அங்கீகாரம் வழங்கும் ஆணையர் அல்லது நோட்டரி வழக்கறிஞரால் சான்றொப்பமிட்டிருக்க வேண்டும். மேலும் வாக்காளர் பட்டியலில் உறுப்பினர்களின் பெயர் இடம்பெற்றதை காண்பிக்கும் ஆதாரத்தை அவர்கள் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

கட்சி தொடங்க எவ்வளவு பணம் தேவை?

இந்த கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருப்பவரே அதன் நிர்வாகி, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆக தகுதி பெற முடியும்.

கட்சி தொடங்கப்பட்டு ஆறு மாதங்களைக் கடந்திருந்தால், அதன் நிதி நிலை தொடர்பான கணக்காளர் பராமரித்த கணக்கீட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இந்த ஆவணங்களுடன் ரூ. 10 ஆயிரத்துக்கான வரைவோலையை உதவிச் செயலாளர், தேர்தல் ஆணையம்,புது டெல்லி என்ற பெயரில் எடுத்து இணைக்க வேண்டும். இந்த தொகை திருப்பித்தரப்படாத தொகையாகும்.

இது தவிர கட்சி அலுவலகம் இடம்பெறுவதாக குறிப்பிடப்படும் முகவரியில் அரசியல் கட்சி இயங்க தடையில்லை என அதன் உரிமையாளர் தடையில்லா சான்றிதழை வழங்க வேண்டும். அந்த முகவரி தொடர்பான வீட்டு வரி ரசீது, பத்திரப்பதிவு நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோல, குறிப்பிட்ட முகவரியில் கட்சி அலுவலகம் செயல்பட தடையில்லா சான்றிதழை மாநகராட்சி அல்லது நகராட்சி வழங்க வேண்டும்.

மேலும் கட்சி நிர்வாகிகளாக குறிப்பிடப்படுவோரின் கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும், அதில் பான் கார்டு எண், அவர்களின் சொத்து விவரங்களும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இந்த அம்சங்களை பூர்த்தி செய்து விட்டால், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் 29ஏ பிரிவின்படி குறிப்பிட்ட பெயரை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பம் மீதான நடவடிக்கையை ஆன்லைன் மூலமாக சரிபார்த்து, ஆணையம் கோரும் விவரங்களை தாக்கல் செய்தால் கட்சிக்கான அனுமதி கிடைத்து விடும்.

பொதுவாக, கட்சி தொடங்கிய 30 நாட்களில் அந்த கட்சி பதிவு செய்யப்பட வேண்டும். இந்த 30 நாட்கள் கடந்து கட்சி பெயர் பதிவு செய்யப்பட்டால் அந்த விண்ணப்பம் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- BBC - Tamil

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்