ஒரு மணிநேர சந்திப்பு: மதிமலர் மீது முதல் சந்திப்பிலேயே காதல் கொண்ட முத்தையா முரளிதரன்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
2282Shares
2282Shares
lankasrimarket.com

தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் அதிக விக்கெட் எடு்த்தவர் முத்தையா முரளிதரன் . 19 ஆண்டு காலமாக இலங்கை சார்பில் விளையாடிய அவர் 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய கிரிகெட் கட்டுப்பாடு வாரியத்தின் காட்சியகத்தில் இடம்பிடித்த ஒரே இலங்கைத் துடுப்பாட்ட அணி வீரர் முத்தையா முரளிதரன் ஆவார்.

இலங்கை அணியின் ஜாம்பவான் என கருதப்படும் இவர் 2005 ஆம் ஆண்டு மதிமலர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு விருப்பமில்லாமல் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகம் முன்னறே வேண்டும் என்ற இலக்குடன் இருந்த காலத்தில் தான் மதிமலரை சந்தித்துள்ளார். அதுவும் முதல் சந்திப்பிலேயே முரளிதரனின் மனதுக்குள் இடம்பிடித்தார் மதிமலர்.

மதிமலருடனான முதல் சந்திப்பு மற்றும் திருமணம்

முரளிதரன் - மதிமலர் திருமணத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பிரபல தமிழ் நடிகர் வாகை சந்திரசேகர் ஆவார். ஒருமுறை நடிகர் சந்திரசேகர் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் கலந்துகொண்டபோது, முத்தையா முரளிதரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருவரும் சந்தித்துபேசிக்கொண்டபோது, தனது தாய் உங்களின் தீவிர ரசிகர் என்றும் உங்களது அதிகமான படங்களை அவர் பார்த்துள்ளார் என முரளிதரன், நடிகர் சந்திரசேகரிடம் கூறியுள்ளார்.

இதனைகேட்டு சந்தோஷம் கொண்ட நடிகர் சந்திரசேகருக்கு, ஒருமுறை முரளிதரனின் தாயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருவரும் சந்தித்துக்கொண்ட போது, தனது மகனுக்கு தீவிரமாக பெண் பார்த்து வருவதை முரளிதரனின் தாய் சந்திரசேகரிடம் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, சந்திரசேகருக்கு தனது நண்பரான சென்னை மலர் மருத்துவமனையின் நிறுவனரும் மறைந்த பிரபல மருத்துவருமான ராமமூர்த்தியின் இளையமகள் மதிமலர் ஞாபகத்திற்கு வந்துள்ளார். ஏனெனில் மதிமலரை சிறுவயதில் இருந்தே நடிகர் சந்திரசேகருக்கு நன்றாக தெரியும்.

மேலும், 24 வயதான மதிமலருக்கு அப்போது மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்துகொண்டிருந்தது. இதனால் முரளிதரனின் தாயிடம் மதிமலர் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து தெரிவித்துள்ளார் சந்திரசேகர்.

இதனைத்தொடர்ந்து மதிமலரின் தாய் நித்யாவுடனான சந்திப்புக்கு பிறகு, முரளிதரனையும் , மதிமலரையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு முரளிதரன் மறுத்துவிட்டார். தற்போது எனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் தனது கிரிக்கெட் பயணத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், முரளிதரனை சமாதானம் செய்து இருவரையும் சந்திக்கவைத்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மதிமலரை முதல் முறையாக சந்தித்தார் முரளிதரன். இந்த சந்திப்பின்போது இருவரும் கிரிக்கெட் மற்றும் தங்களுக்கு பிடித்தவை குறித்து பகிர்ந்துகொண்டனர். சுமார் 1 மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் முரளிதரன் மனதுக்குள் இடம்பிடித்தார் மதிமலர்.

பார்ப்பதற்கு குடும்ப பெண் போன்று இருக்கிறாய்...உன்னை போன்ற ஒரு பெண்ணைத்தான் மனைவியாக அடைவதற்கு தேடிக்கொண்டிருந்தேன் என முரளிதரன் தனது முதல் சந்திப்பின்போது மதிமலரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, 2005 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹாலில் மார்ச் 21 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு தனது கணவரோடு இலங்கைக்கு குடிபெயர்ந்தார் மதிமலர். இந்த தம்பதியினருக்கு நரேன் என்ற மகன் உள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்