சோபன் பாபுவை திருமணம் செய்யாமல் போனது ஏன்? மனம் திறந்த ஜெயலலிதா: பிளாஸ்பேக்

Report Print Raju Raju in உறவுமுறை

நடிகர் சோபன் பாபுவை தம்மால் திருமணம் செய்யாமல் போனது ஏன் என்பது தொடர்பாக தனியார் வார இதழுக்கு ஜெயலலிதா அளித்திருந்த பேட்டியில் விவரித்திருக்கிறார்.

1980-ம் ஆண்டு வெளிவந்த குறித்த இதழில் ஜெயலலிதா கூறியிருந்ததாவது,

ஏற்கனவே திருமணமான ஒருவருடன் வாழ்க்கை நடத்துவது தவறில்லை என்பது உங்கள் அபிப்ராயமா என்ற கேள்விக்கு, ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்தபின்தான் இந்தப் பொதுவான கேள்விக்கு பதில் அளிக்க முடியும்.

ஆனால் எந்த கன்னிப் பெண்ணும் வேண்டும் என்று திட்டமிட்டு ஏற்கனவே திருமணமான ஒருவரை காதலிப்பது இல்லை.

எந்தப் பெண்ணுமே தனக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். அவர் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள்.

நானும் அப்படித்தான் முதலில் கனவுகள் கண்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஷோபன் பாபுவைச் சந்தித்தவுடன் என் மனம் அவர் மீதே பற்றுக் கொண்டுவிட்டது.

திட்டமிட்டுச் செய்த காரியமல்ல இது. அவரை முதலில் சந்தித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது.

அது அவருடைய தவறும் அல்ல. என்னுடைய தவறும் அல்ல. அவர் மனைவியை விவகாரத்து செய்து என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

எத்தனையோ பேர் அப்படிச் செய்யவில்லையா? என கேட்கலாம். ஆனால் நாங்கள் இருவரும் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அவருடைய மனைவி எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் எதற்காக நிராகரிக்கப்பட வேண்டும். தவிர அவர் மனைவி உடல்நிலையும் சரியில்லை.

என்னை ஷோபன் பாபு சந்திக்கும் முன்பே அவர் மனைவியின் ஆரோக்கியம் சீர் குலைந்திருந்தது. அப்படி இருக்க அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தருவது நியாயமாகாது என்று எண்ணினோம்.

ஷோபன் பாபுவிற்கு ஒரு மகனும் 3 பெண்களும் இருக்கிறார்கள். அந்த மூன்று பெண்களுக்கும் நல்லபடியாகத் திருமணம் நடக்க வேண்டும். அவர்களுடைய எதிர்காலம் என்னால் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்ததால்தான் இதுவரை எங்கள் உறவைப் பற்றி பேசாமல் இருந்தேன் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers