முருகன்- நளினியின் இதயத்தில் இன்றும் பூத்திருக்கும் காதல்! சிறைப் பறவைகளின் கதை

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

1991 ஆம் ஆண்டு முதல் முதல் இன்று வரை சிறைச் சுவர்களுக்கு இடையில் கிளைத்துக் கிடக்கிறது நளினி- முருகன் காதல்!

யாழ்ப்பாணம் இத்தாவில் பிறந்தவர் முருகன் என்ற ஸ்ரீகரன். ஓர் அண்ணன், ஓர் அக்கா, மூன்று தம்பிகள், மூன்று தங்கச்சிகள் என மொத்தம் ஒன்பது பேர்.

1991-ம் ஆண்டு ஜனவரியில் சென்னைக்கு வந்துள்ளார். கடல் வழியே சென்னைக்கு வந்தபோது இவரது வயது 19. சென்னைக்கு வந்தவுடன், 'தாஸ்’ என்று தனக்குதானே பெயர் சூட்டிக்கொண்டார்.

2014 ஆம் ஆண்டு வழக்கறிஞரிடம் முருகன் தனது காதல் கதை குறித்து பகிர்ந்துகொண்டார்.

சென்னைக்கு வந்த புதிதில் பாக்கியநாதன் என்கிற தமிழ் ஆர்வலரின் வீட்டில் தங்கியுள்ளார் முருகன். நளினியின் தம்பிதான் பாக்கியநாதன்.

நான் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த போது ஆரம்பத்தில், நளினியின் தம்பி, தங்கை ஆகிய இருவரை மட்டுமே சந்தித்தேன். நளினியை சந்திக்கவில்லை.

ஒருமுறை நளினியின் அம்மா பத்மாவிடம் உங்கள் மூத்த மகள் நளினி எங்கே என்று கேட்டதற்கு அவர் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். என்னிடம் கோபித்துக்கொண்டு பெரியம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாள் என தெரிவித்தார்.

பத்மா அம்மாவிடம், உங்களது மகளை சேர்த்துவைக்கிறேன் என கூறினேன். 1991 பிப்ரவரி 8-ம் தேதி முதன்முதலாக அடையாறில் நளினியை சந்தித்துள்ளார் முருகன். அவரைப் பார்த்தவுடன் இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. ஆனால், அதைக் காதல் என்று சொல்ல முடியாது.

அன்றைய தினம் எனது பிறந்த நாள் என்று தெரிந்தவுடன், என்னோடு வந்திருந்த அனைவரையும் அழைத்துச் சென்று எளிமையான ஒரு விருந்தை எனக்குப் பரிசாக அளித்தார். நான் எப்போதுமே என் பிறந்த நாளைக் கொண்டாடியது இல்லை. யுத்தக் களத்தில் அதற்கான வாய்ப்புகளும் இல்லை.

ஆனால், நளினி என் பிறந்த நாளைக் கொண்டாடச் செய்தது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

நளினியை எப்படியாவது அவரது அம்மாவுடன் சேர்த்து வைக்க வேண்டும், அவரை சந்தித்து பேச வேண்டும் என்ற நோக்கில் தினமும் சைக்கிள் மூலம் ராயப்போட்டையில் இருந்து அடையாறுக்கு செல்வேன்.

பணியில் இருந்து அவர் வரத் தாமதமானால், காத்திருந்து அவருடன் பேசிவிட்டு அவரைப் பேருந்து ஏற்றிவிட்டு மீண்டும் ராயப்பேட்டைக்குத் திரும்புவேன்.

ஒருநாள் நளினிக்கு வேலை தாமதமாக முடிந்தபோது, என்னை அவர் தனியாக சைக்கிளில் ராயப்பேட்டை அனுப்ப விரும்பாமல், வில்லிவாக்கம் பெரியம்மா வீட்டுக்கு என்னையும் அழைத்துச் சென்றார்.

ஒரு பேருந்துப் பயணத்தில் முதன்முதலாக நாங்கள் இருவரும் நீண்ட நேரம் செலவிட்டது அப்போதுதான். நான் அவருக்கும் அம்மாவுக்கும் இடையிலான பிரிவு பற்றிப் பேசினேன்.

ஒரு கட்டத்தில் உடைந்து அழுதுவிட்டார். அவரது கண்ணீர் என் கைகளை நனைத்தது. அம்மாவுடன் இணையும் விஷயத்தில், நான் நளினியின் மனதில் பாதியைக் கரைத்துவிட்டேன்.

இப்படியாக எங்கள் நட்பு தொடர்ந்தது. ராயப்பேட்டையில் அவரது அம்மா வீட்டுக்கு நளினியை அழைத்து வந்துவிட்டேன்.

நளினி, சுமார் ஒரு வருடம் கழித்து அவருடைய அம்மாவையும் தம்பியையும் பார்த்தார். மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது அது.

காதல் உணர்வு எங்களை ஈர்த்து இருந்தாலும், நளினியின் எதிர்கால வாழ்வு குறித்து நான் கவலைப்பட்டேன். அந்தக் கவலைகளை ஏற்றுக்கொண்ட நளினி, அதற்கான காரணங்களை நிராகரித்தார். காதலில் உறுதியாக இருந்தார். 'உன்னோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும்’ என்றார். என்னைப் பற்றியும், என் குடும்பம் பற்றியும் கேட்டார்.

ஒரு போராளியைக் காதலித்ததைத் தவிர, வேறு எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை!'' நான் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு, நளினியை ஒரு மூத்த உறுப்பினருக்கு அறிமுகம் செய்துவைத்ததுதான்.

தணு, சுபா இருவரையும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார் நளினி. எனக்காக, என் மீதான காதலுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அதைச் செய்தார் நளினி.

ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, ஏப்ரல் 22-ம் தேதி திருப்பதியில் வைத்து நளினியின் கழுத்தில் தாலி கட்டினேன்.

மே 21 இரவு, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தி கேள்விபட்டதும் அதிர்ச்சி அடைந்தோம். விடுதலைப் புலிகள், அவர்களின் ஆதரவாளர்கள் என அனைவரையும் தேடித் தேடி வேட்டையாடியது காவல் துறை.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஐந்து நாட்கள் கழித்து தணுவின் படம் வெளிவந்தபோது பீதியில் உறைந்துவிட்டோம்.

மறுநாள் காலை நானும் நளினியும் மீண்டும் திருப்பதி சென்றோம். என்னிடம் இருந்த சயனைடு குப்பி, தண்ணீரில் நனைந்து பாழாகிவிட்டது. புதிய சயனைடு குப்பி கேட்டிருந்தேன்.

தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்திருந்தோம். ஆனால், திருப்பதி போன மறுநாளில் இருந்து நளினி வாந்தி எடுக்கத் தொடங்கினார். அவர் கர்ப்பமாக இருந்தார். இதனால் தற்கொலை முடிவை கைவிட்டோம்.

ழுப்புரத்தில் இருந்த ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றோம். ஆனால், அவர் அங்கு இல்லை. அதனால் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பினோம்.

சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது, எங்களைக் கைதுசெய்தது பொலிஸ். கைதான சில நாட்களில் எனக்கு, 'மொட்டைத் தலை’ முருகன் என்று பெயர் வைத்தார்கள்.

நளினி - முருகன் தம்பதியினருக்கு அரித்ரா என்ற மகள் உள்ளார். தற்போது இவர் லண்டனில் வசித்து வருகிறார்.

தனது வாழ்வில், ஒரு வானவில்லைப் போல மின்னி மறைந்த நளினியுடனான காதல் நினைவுகள் மட்டுமே முருகனிடம் எஞ்சியிருக்கின்றன.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers