உயிரிழை பராமரிப்பு இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

Report Print Dias Dias in மதம்

சந்தோசமான நிகழ்வுகள் என்றால் வெறும் கனவுகளாகவே இருந்த எங்களது வாழ்க்கையில் நாங்கள் இன்னும் கைவிடப்பட்டவர்களில்லை என மகிழ்ச்சியோடும், மன உறுதியோடும் உயிரிழை பராமரிப்பு இல்லத்தின் பயனாளிகள் மற்றும் நிர்வாகத்தினர்களால் மிகவும் சிறப்பாக தமிழரின் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த இல்லம் முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் அமைந்துள்ளது.

கடந்தகாலங்களில் சிதறுண்டு இருக்க இடமின்றியும், பராமரிப்பு வசதிகளின்றியும் தனித்தவர்கள் இது போன்ற சந்தோசமான நிகழ்வுகள் என்றால் வெறும் கனவுகளாகவே இருந்தது அவர்களது வாழ்க்கையில். ஆனால் இன்று அவர்களுக்கான ஓர் இடம் அமைத்து தாங்கள் கைவிடப்பட்டவர்களில்லை, எங்களுக்கும் மகிழ்ச்சியோடு இருக்க ஓர் அழகான இடமுண்டு என்ற எண்ணத்தோடு பொங்கல் விழாவை மிகுந்த சந்தோசத்தோடு கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையை எட்டுவதற்கு எம்மோடு கரம் கோர்த்த புலம் பெயர் உறவுகள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அத்தோடு எமது உயிரிழை பராமரிப்பு இல்லத்தில் வசித்து வரும் பயனாளி ஒருவரின் உள்ளக்கிடக்கைகளை பதிவிடுவது சிறந்ததென நாம் எண்ணுகின்றோம் என பயனாளி ஒருவரின் மனப் பதிவு பின்வருமாறு,

நான் கடந்த போரின் போது போராளியாக இருந்து காயப்பட்டேன். 2009 ற்குப் பின் என்னைப் பராமரிக்க யாரும் இன்றி, நிரந்தரமாக இருக்க இடம் இன்றியும் என்னிடம் பணமிருந்தால் என்னைப் பார்க்கின்றேன் என்று ஒரு சிலர் சில மாதங்கள் வைத்திருப்பார்கள்.

என்னிடம் ஏதும் இல்லை என்றதும் என்னை வெளியே போ என்று அனுப்பிவிடுவார்கள். நானும் வேறு ஓர் இடத்தைத் தேடி அலைவதோடு என் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கும்.

அந்த நிலையில் என்னால் இனியும் இவ்வாறு அலைய முடியாது. நான் ஒரு போராளியாக இருந்தும் என் நிலை இப்படியாகிவிட்டது. உயிரிழை அமைப்பிடம் என்னைப் பொறுப்பெடுத்துப் பார்க்கும்படி கேட்டிருந்தேன். அதற்கு அவர்கள் பராமரிப்பு இல்ல வேலைகள் முடிந்ததும் எடுக்கின்றோம் என்று சொல்லியிருந்தார்கள்.

அதற்கமைய 12.05.2018 அன்று என்னை உயிரிழை இல்லத்திற்கு அழைத்து வந்தார்கள். அன்றைய நாள் மிகவும் சிறப்புற நடைபெற்ற திறப்பு விழாவைத் தொடர்ந்து அன்று மாலை இப் பராமரிப்பு இல்லத்தின் செலவுக்கான நிதி கிடைக்கவில்லை.எமக்கான உணவு பராமரிப்பு என்பனவற்றிற்கு என்ன செய்வதென்று நிர்வாகத்தினர் திணறினர். உடனே அருகில் உள்ள கடையில் கடனடிப்படையில் உணவெடுக்க ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்தும் மிக முக்கியமானதொன்றாக மறு நாள் காலை எமக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தப்புண்ணிற்கு மருந்து கட்ட வேண்டும்.

நிர்வாகத்தினரும் பல இடங்களில் முயற்சி செய்து இறுதியாக கிளிநொச்சியில் இருந்து மருந்து கட்டுவதற்கு ஒழுங்குகள் மேற்கொண்டனர்

அன்று அவர்கள் ஒரே ஒரு வாக்குறுதியை அளித்திருந்தார்கள். என்ன கஸ்ரப்பட்டாலும் உங்களை நன்றாக வைத்திருப்போம் என்றனர்.

நாம் யோசித்தோம் எம் போன்று இருக்கும் இவர்களால் எப்படி முடியும் என்று அவர்கள் சொன்னது போல் சில நாட்களில் சமையல்இ மருந்துஇ பராமரிப்பு போன்ற அனைத்தையும் மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்து இன்றுவரை செயற்படுத்துகின்றனர்.

நாம் வரும் போது பெரிய புண்ணோடு கஸ்ரப்பட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று புண்ணெல்லாம் மாறி மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் தைப்பொங்கல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது அதனைப் பார்த்து மிகுந்த கவலையோடு ஏங்கியவர்களாகக் காணப்பட்டோம்.

இம்முறை தான் எனது நண்பர்களோடு மிகவும் சந்தோசத்துடன் எமது இல்லத்தில் தைப்பொங்கலைக் கொண்டாடினோம்.இது நிலைத்து நீடிக்க வேண்டும் எம் போன்றோரின் சந்தோசம் இந் நிகழ்வுகள் மூலமே கிடைக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்