திருமண தோஷம் நீக்கும் ஞீலிவேனேஸ்வரர் கோயில்

Report Print Gokulan Gokulan in மதம்
42Shares
42Shares
lankasrimarket.com

திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம்.

இங்கு எழுந்தருளியிருக்கும் மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலம் தென்கைலாயம் என்று அழைக்கப்படுகின்றது.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இது பல்லவர் காலக் கோயிற்கட்டிட அமைப்பைக் கொண்டதாக விளங்குகின்றது.

திருக்கடையூரில் சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமதர்மன், இத்தல இறைவனின் அருளால், தைப்பூச நாளன்று மீண்டும் உயிரையும், பணியையும் பெற்றான். எனவே இங்கு எமனுக்கான சிறப்புச் சந்நிதி உள்ளமையால், இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.

இத்தலம் நீலகண்டனார் சிதம்பரத்தில் தாம் கொண்டிருந்த ஆடலரசன் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இத்தலத்திலேயே காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் என்று அழைக்கப்படுகின்றது.

இது காவேரி நதியின் வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 61ஆம் தலமாக விளங்குகிறது. இத்தலம், சம்பந்தர், சுந்தரர் மற்றும் அப்பர் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமாகும்.

தல வரலாறு

ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றேன்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார்.

தலச்சிறப்பு

திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமி தேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.

மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்து தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.

சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவேனேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை.

திருமணம் கைகூட வாழை பரிகார பூஜை

இக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள்.

நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும்.

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். இழந்த பணிவாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க, ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக் கொள்கின்றார்கள்.

தீர்த்தம் மற்றும் தலவிருட்சம்

இத்திருத்தலம் ஐந்து பிரகாரங்கள் கொண்டு இங்கு ஏழு தீர்த்தங்கள் உள்ளன, அவையாவன விசாலாட்சி, எமன், கல்யாணி, அக்னி, தேவ, அப்பர் மற்றும் மணியங்கருணை என்பனவாகும்.

இவ்வாலயத்தின் தலவிருட்சமாக கல்வாழை சிறப்புற்று விளங்குகின்றது. தலவிருட்சமான வாழை மரம் ‘ஞீலி’ என்றொரு வகையைச் சார்ந்தது.

திருமணத் தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜை செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

இத்தல ராவணன் வாசல் கோபுரத்தைக் கடந்து வந்தால், ஒருவருடைய நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் விலகும் என்பது ஐதீகம்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்