கிறிஸ்துவின் தானியங்கள் 03: எது சிறந்த வாழ்க்கை?

Report Print Kavitha in மதம்

டவுள் வழங்கிய திருச்சட்டங்களைக் கற்று, அவற்றைத் தொழுகைக் கூடங்களில் போதிப்பவர்களை ‘திருச்சட்ட வல்லுநர்’ என்று யூத மக்கள் அழைத்தனர்.

மக்களுக்கு போதிக்கிறோம் என்ற கர்வத்துடன் வலம் வந்த இவர்களுக்கு, இயேசுவின் மீது பொறாமை இருந்தது. இயேசுவின் புகழ் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த நாட்களில் தொழுகைக் கூடங்களுக்கு வரவேண்டிய மக்கள், இயேசு போதிக்கும் இடங்களில் குவிந்தார்கள்.

இதனால் ஏட்டுச்சுரைக்காய்களாக இருந்த திருச்சட்ட வல்லுநர்கள், இயேசுவிடம் இடக்கு மடக்காகக் கேள்விகளைக் கேட்டு அவரைத் தோற்கடிக்க நினைத்தனர். உள்நோக்கத்துடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இயேசு கதையுடன் கூறிய பதில்களால் அவர்கள் மனம் மாறி இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.

முடிவில்லாத வாழ்க்கை

இயேசுவின் காலத்தில் யூதர்கள், மதத் தலைவர்கள், குருக்கள் ஆகியோரால் வெறுக்கப்பட்ட மக்களாக சமாரியர்கள் வாழ்ந்துவந்தனர். இயேசுவோ எல்லோரையும்போல் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர்களை வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது என்பதைத் தன் வாழ்வின் வழியே எடுத்துக்காட்டினார். அனைவரும் கடவுளின் குழந்தைகளே என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இயேசுவை மடக்க நினைத்து அவரை நெருங்கி வந்த திருச்சட்ட வல்லுநர் ஒருவர் இயேசுவைப் பார்த்து “ போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? ” என்று கேட்டார். அதற்கு அவர், “திருச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது, நீங்கள் என்ன வாசித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அப்போது திருச்சட்ட வல்லுநர், “ ‘உங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையின் மேல் உங்கள் முழு மனதோடு அன்பு காட்ட வேண்டும்’ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல சக மனிதர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது”என்றார். உடன் இயேசு, “சரியாகச் சொன்னீர்கள்; அப்படியே செய்துகொண்டிருங்கள்; அப்போது உங்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”என்று சொன்னார்.

நல்ல சமாரியன்

ஆனால் அந்தத் திருச்சட்ட வல்லுநர், தன்னை ஒரு நீதிமான் எனக் காட்டிக்கொள்வதற்காக, “ நான் அன்பு காட்ட வேண்டிய அந்த சக மனிதர்கள் உண்மையில் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு ஒரு கதையைக் கூறினார்.

“ஒருவன் எருசலேம் நகரத்திலிருந்து கீழ்நோக்கி எரிக்கோ நகரத்துக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது, திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டான். அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு, அவனை பலமாகத் தாக்கி, கிட்டத்தட்டச் சாகும் நிலையில் குற்றுயிராக விட்டுவிட்டுப் போனார்கள். அந்தச் சமயத்தில் ஆலய குரு ஒருவர் தற்செயலாக அந்த வழியில் வந்துகொண்டிருந்தார்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவனைப் பார்த்தபின், எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். ஒரு லேவியர் அந்த வழியில் வந்தார். மதகுருவைப் போலவே அவரும் கண்டும் காணதவரைப்போல் நடந்துகொண்டார். ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அவனைப் பார்த்தபோது மனம் உருகினார்.

அவன் பக்கத்தில் போய், அவனுடைய காயங்கள்மேல் எண்ணெய்யையும் திராட்சைரச மதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார். பின்பு, அவனைத் தன்னுடைய கழுதையின் மேல் ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய்க் கவனித்துக்கொண்டார்.

அடுத்த நாள் அங்கிருந்து புறப்படும்முன் இரண்டு தினாரியூ பணத்தை எடுத்து சத்திரக்காரரின் கையில் கொடுத்து, ‘இவனைக் கவனித்துக்கொள்ளுங்கள்; இதற்குமேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னார்.

அப்படியென்றால், இந்த மூன்று பேரில், திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர் யாரென்று நினைக்கிறீர்கள்?” என்று இயேசு கதையின் முடிவில் கேட்டார். அதற்குத் திருச்சட்ட வல்லுநர், “அவனிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டவர்தான்”என்று சொன்னார். அப்போது இயேசு, “நீங்களும் போய் அதேபோல் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.

திகைத்த சீடர்கள்

சக மனிதரிடம் பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் அன்பு காட்டுவதே சிறந்த வாழ்க்கை என்பதை விளக்கவே இயேசு இந்த உவமைக் கதையைப் பயன்படுத்தினார். கதை கூறியதோடு நின்றுவிடாமல் தாம் சொன்னதைச் செயலிலும் காட்டினார் இயேசு. தொழுநோயாளியாக இருந்த ஒரு சமாரியனைக் குணப்படுத்தினார். தன்னை நோக்கி ஆர்வத்துடன் நாடிவந்த சமாரியர்களுக்கு அவர் போதித்தார்.

ஒரு சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தியபின் அவளிடம் மனம்விட்டு உரையாடினார். யூதப்பெண், சாமரியப்பெண் என்ற பாகுபாடு இல்லாமல் பெண்களுக்கு போதித்தார். பொது இடங்களில் எந்தப் பெண்ணுடனும், அது நெருங்கிய உறவுக்காரப் பெண்ணாக இருந்தாலும் சரி, எந்த ஆணும் பேசக் கூடாது என்பதில் யூத ரபிக்கள் கறாராக இருந்தார்கள். இப்படிப்பட்ட பின்தங்கிய சூழ்நிலையில் ஒரு சமாரியப் பெண்ணிடம் இயேசு பேசுவதைப் பார்த்து அவரது சீடர்களே திகைத்துப்போனார்கள்.

- Thehindu

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்